head
Join Us


சொந்த மண்ணில் வீழ்ந்தது இந்தியா !

|2023-11-20 11:21:06|General| Page Views: 154

உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் தொடர் வெற்றிகளை பதிவு செய்யும் அணி என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் 6வது முறையாக அவுஸ்ரேலிய அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஒரு லட்சத்தும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு மத்தியில் நேற்று அகமதாபாத்தில் இடம்பெற்ற போட்டியில் இந்திய அணியை விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்ரேலிய அணி வெற்றிபெற்றது.

உலக சம்பியன்களை தீர்மானிக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று அவுஸ்ரேலிய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ஒட்டங்களை மட்டுமே பெற்றது.

இந்தியா சார்பில் ரோகித் சர்மா 47 ஒட்டங்களையும், விராட் கோலி 54 ஒட்டங்களையும் கே.எல். ராகுல் 66 ஒட்டங்களையும் அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.

அவுஸ்ரேலிய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் ஹசில்வூட் மற்றும் பட் கம்மின்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 241 ஒட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பதில் தனது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலிய அணி முதலாவது பவர்பிளேயில் 3 விக்கெட்கள் பறிபோனது.

இருப்பினும் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் மற்றும் மானஸ் லாபுசென் ஆகியோர் அவுஸ்ரேலியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

சிறப்பான இன்னிங்ஸை ஆடிய டிராவிஸ் ஹெட், ஒருநாள் போட்டிகளில் தனது ஐந்தாவது சதத்தை பதிவு செய்தார். வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் 137 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார்.

இதனை தொடந்துவந்த கிளென் மேக்ஸ்வெல் 2 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க அவுஸ்ரேலிய அணி 43 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை கடந்து உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது.

1987, 1999, 2003, 2007 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் உலக கிண்ண கிரிக்கெட் மகுடத்தை வென்ற அவுஸ்ரேலியாவிற்கு இது 6 ஆவது உலகக்கிண்ணமாகும்.

பட் கம்மின்ஸ் தலைமையில், அவுஸ்ரேலிய அணி ஒரே ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றியுள்ளது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.