head
Join Us


மம்தாவை எச்சரித்த ஆளுநர்!

|2024-07-01 10:28:06|General| Page Views: 142

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தன்னைச் சீண்டவோ பயமுறுத்தவோ முடியாது என அம்மாநில ஆளுநர் ஆனந்தா போஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 27 ஆம் திகதி தலைமைச் செயலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ‘சமீப காலங்களாக எழுந்துள்ள புகார்களால் ஆளுநர் மாளிகையான ராஜ் பவனுக்கு செல்லவே தங்களுக்கு பயமாக இருப்பதாக பெண்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார்.

இக்கருத்தானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி மம்தா மீதும்,திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் ஆனந்தா போஸ் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர்” மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் மம்தாவை நான் மதிக்கிறேன். அதுபோல மம்தாவும் நாகரீகமான முறையில் பேச வேண்டியது அவசியம். யாரை வேண்டுமானாலும் சீண்டலாம் என்று அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார்.

மம்தா என்னை சீண்டவோ பயமுறுத்தவோ முடியாது. அந்த அளவுக்கு அவர் வளரவில்லை. எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. நான் மம்தா என்ற தனி நபர் மீதே அவதூறு வழக்கு தொடர்ந்தேன். அந்த தனி நபர் முதலமைச்சராக உள்ளார் அவ்வளவுதான்” இவ்வாறு ஆனந்தா போஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் ராஜ் பவனில் பணிபுரிந்து வந்த பெண்ணொருவர், ஆளுநர் ஆனந்தா போஸ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியிருந்த நிலையில் இதுதொடர்பாக கல்கத்தா பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.