எமது மலையக சமூகமும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும்.!
|2024-07-24 10:51:09|General|
Page Views: 304
மலையகப் பெருந்தோட்ட மக்களை பற்றி பேச ஆரம்பித்தால் உடனே அவர்களின் வேதன உயர்வு விவகாரம் பற்றி மட்டுமே அனைவரும் கவனம் செலுத்துவார்கள் . ஆனால் அதனைத் தாண்டி அம்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பல உள்ளன.ஆனால் மலையக மக்களுக்கு வேறெந்த பிரச்சினையும் இல்லாதது போலவும் வேதன உயர்வு பிரச்சினை மட்டுமே உள்ளது போல் அரசியல்வாதிகள் போலி விம்பத்தை உருவாக்கி விட்டார்கள்.
மலையகப் பெருந்தோட்ட மக்கள் பெரும்பாலும் லயன் குடியிருப்புகளிலேயே வசித்து வருகின்றனர். அவை பிரித்தானிய காலனித்துவ காலகட்டத்தின்போது
கட்டப்பட்டவைகள் ஆகும். அன்றிலிருந்து இன்று வரை அவற்றின் கூரைகள் கூட மாற்றப்படாத ஒரு சில குடியிருப்புகள் இன்னமும் எமது மலையகத்தில் உள்ளன .200 வருடம் கடந்து விட்டோம் என சிறப்பு முத்திரை வெளியிடும் அரசியல் தலைமைகளே 200 வருடத்திலும் அவர்கள் வசிக்கும் இடத்தை நீங்கள் இன்னும் முழுமையாக மாற்றி தரவில்லையே அதனை என்றாவது சிந்தித்து உண்டா?
மலையகத்தில் பாரிய பிரச்சினை என்றால் அதிகரித்து வரும் மதுபான கடைகள் ஆகும். முன்னைய காலங்களை விட தற்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளது .இவற்றில் ஒரு சில மதுபான கடைகள் அரசியல்வாதிகளுக்கு உரியவையாகும் .இது பெரும்பாலும் அனைவரும் அறிந்து உள்ளார்கள் ஆனால் அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளனர் .
மேலும் போதை பொருள் பாவனையும் வெகுவாக அதிகரித்துள்ளது என அண்மைய ஆய்வுகள் சில தெரிவிக்கின்றன. பாடசாலை மாணவர்களும் அதற்கு அடிமையாகி வருவதாக கூறப்படுகிறது. எதிர்கால சமுதாயம் எம் கண் முன்னே இவ்வாறு கெட்டொழிந்து போவதை நாம் வேடிக்கை பார்க்க போகிறோமா? இதற்கான எந்த தீர்வுமே இல்லையா? இப்போதைப் பொருள் மலையகத்திற்கு யார் கொண்டுவந்தார்கள் ? இதில் ஒரு சில அரசியல் தலைமைகளுக்கு சம்பந்தம் இருக்கிறது . அவர்கள் யாரென்று நான் சொல்லவேண்டியதில்லை. அவர்கள் யாரென்று உங்களுக்கே தெரியும்?
பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள பாதைகளை நினைத்துப் பார்க்கையில் ஒருவித அச்சநிலை தோன்றும். பல ஊர்களுக்கு இன்று வரை சரியாக செப்பனிடப்படாத பாதைகளே காணப்படுகின்றன. அவற்றில் செல்லும் வாகனங்கள் கூட எளிதில் பழுதடைந்து விடும். அவசரமாக ஒருவரை வைத்தியசாலை அழைத்து செல்வதென்றால் கூட பல்வேறு சிரமங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது .ஏனைய மாவட்டங்களின் அபிவிருத்தி விடயங்களுக்கு நிதி ஒதுக்குவது போல் எமது மலையகத்திற்கும் வருடந்தோறும் மலையகத்திற்கும் நிதி ஒதுக்கப்படுகின்றது அல்லவா? அவ்வாறு ஒதுக்கப்படும் நிதிக்கு என்ன ஆனது ?? யார் பொறுப்பு? வருடந்தோறும் இவ்வாறு ஒதுக்கப்படும் நிதி என்னவாகின்றது ?
பொருளாதார சிக்கல்களால் பல மாணவர்கள் தங்கள் கல்வியினை இடைநிறுத்தி கொழும்பு போன்ற நகரங்களுக்கு தொழிலை தேடி செல்வதாக கூறப்படுகின்றது. இவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் என்பது குறைவு. இவர்களுக்கான சுய தொழில் ஏற்பாடுகளோ வேறு எந்த தொழிற்பயிற்சிகளோ ஒழுங்கு செய்து கொடுக்கப்படுவதில்லை.
வறுமையின் காரணமாக தொழிலுக்கு செல்ல நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
இத்தனை பிரச்சினைகளையும் வைத்துக்கொண்டு எமது மலையக மக்கள் வாழ்க்கையை எதிர்கொள்கின்றார்கள் என்றால் நிச்சயம் அவர்களை நினைத்து கவலையாகவே உள்ளது . இதனை எமது மலையக தமிழ் பிரதிநிதிகள் கண்டு கொள்வதில்லை .
அவர்களை பொருத்தவரையில் வேதன உயர்வு மட்டுமே பெருந்தோட்ட மக்களின் பிரதான பிரச்சினை என்று நினைக்கின்றார்கள் .ஆனால் அதையும் தாண்டி எமது மக்கள் படும் துன்பங்கள் எத்தனையோ இருக்கின்றன முதலில் அவற்றை தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அதை விடுத்து உங்கள் போலி அரசியலை எம் மக்களிடம் காண்பித்து வாக்கு வங்கிகளாக மட்டும் எம்மக்களை பயன்படுத்தாதீர்கள்.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.