head


கொரோனா வைரஸ்: தொற்றிலிருந்து 100% வரை நம்மை பாதுகாக்கும் FFP3 மாஸ்குகள் – மற்ற மாஸ்குகளின் நிலை என்ன? டேவிட் சுக்மன் அறிவியல் ஆசிரியர், பிபிசி

|Thursday, 01st July 2021|General| Page Views: 1

கடந்த 2020ஆம் ஆண்டில் உலகை ஆட்கொண்ட கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் உருமாறிக் கொண்டே வருகிறது. கொரோனாவில் இருந்து இதுவரை உலகம் மீண்டதாகத் தெரியவில்லை.

ஆனால் கொரோனாவில் இருந்து நம்மையும், நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் பாதுகாக்க, முகக்கவசம், சமூக இடைவளி மற்றும் சானிடைசர் பயன்படுத்துவதுதான் மிக முக்கியமான விஷயங்களாக கூறப்பட்டு வருகின்றன.

அப்படிப்பட்ட மூன்று முக்கிய விஷயங்களில் ஒன்றான முகக்கவசம் நமக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பளிக்கிறது. எந்த முகக்கவசத்தை நாம் பயன்படுத்த வேண்டும்? இதுவரை நாம் பயன்படுத்தி வரும் பல்வேறு முகக்கவசங்களில் பாதுகாப்பு நிலை என்ன? வாருங்கள் பார்ப்போம்.

சுகாதாரப் பணியாளர்கள் தான் கொரோனாவுக்கு மிக நெருக்கத்தில் இருந்து வருகிறார்கள். அவர்கள் தரமான முகக்கவசத்தை அணிந்து கொண்டால், அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் கணிசமாகக் குறையும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மருத்துவமனை என்.ஹெச்.எஸ். ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட் நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது.

உயர் தர முகக்கவசமான FFP3-யை அணிந்து கொண்டால் 100 சதவீதம் வரை பாதுகாப்பு கிடைக்கும்.

பொதுவாக மருத்துவர்கள் அணிந்து கொள்ளும் சர்ஜிகல் முகக்கவசத்தை அணிந்து கொண்டால் கொரோனா தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. துணி முகக்கவசங்கள் அதிகம் பாதுகாப்பு வழங்கவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதை அணிந்து கொண்டால் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இது பாதுகாப்பு உபகரணங்களில் ஒன்றாகவே சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தொண்டு நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஒரு வழக்கமான கொரோனா மருத்துவ பரிசோதனையின் போது இந்த தரவுகள் திரட்டப்பட்டன. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் பிரசுரிக்கப்பட்டுவிட்டாலும், இதுவரை மற்றவர்களால் மறுஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை.

பிரிட்டனில் கடந்த ஆண்டு பெரும்பாலும், மருத்துவமனைகளில் தேசிய அளவில் ஒரே மாதிரியான வழிமுறைகளே பின்பற்றப்பட்டது. அதில் சுகாதாரப் பணியாளர்கள் ஒரு சில நேரங்களைத் தவிர சர்ஜிக்கல் முகக்கவசத்தைத் தான் அணிய வேண்டும் எனக் கூறப்பட்டது.

சர்ஜிக்கல் முகக்கவசங்கள் திரவத் தன்மையை தாக்குபிடிக்கக் கூடியது (Fluid Resistant) என்றாலும், மூக்கு மற்றும் வாய் பகுதியை முழுமையாக மூடாது. சற்று தளர்வாகவே இருக்கும். அதே போல காற்றில் இருக்கும் ஏரோசல் எனப்படும் நுண் நீர்துகள்களால் சர்ஜிக்கல் முககவசம் அணிந்திருப்பவருக்கும் கொரோனா ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஏரோசல்களால் கொரோனா ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இப்போது பரவலாக ஒப்புக் கொள்ளப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சிவப்பு வார்டுகளில் இருக்கும் கொரோனா நோயாளிகளை கவனித்து கொள்ளும் சுகாதாரப் பணியாளர்களுக்கு, பச்சை வார்டுகளில் இருக்கும் கொரோனா அல்லாத நோயாளிகளை பார்த்துக் கொள்ளும் பணியாளர்களை விட, கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு சுமார் 47 மடங்கு அதிக வாய்ப்பு இருப்பதாக இந்த ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது.

கொரோனா தொற்று பரவாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய சொன்னார்களோ அதையெல்லாம் செய்த பிறகும் மருத்துவமனை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்கிறார் முதன்மை ஆராய்ச்சியாளரான மருத்துவர் மார்க் ஃபெர்ரிஸ்.

கடந்த டிசம்பர் மாதம் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கிய போது, சிவப்பு வார்டில் பணிபுரியும் பணியாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்தார்கள் கேம்பிரிட்ஜில் உள்ள மேலாளர்கள்.

"FFP3 ரெஸ்பிரேட்டர் முகக்கவசங்கள் பயன்படுத்துவது மட்டுமே அதுவரை செய்யப்படாமல் இருந்தது. அதையும் செய்தார்கள்" என்கிறார் மருத்துவர் ஃபெர்ரிஸ், FFP3 முகக்கவசங்கள் முகத்தோடு நெருக்கமாக இருக்கும். குறிப்பாக இது ஏரோசல் என்கிற காற்றில் இருக்கும் நுண் நீர்துகல்களை தடுத்து நிறுத்தும்.

மிகப் பெரிய தாக்கம்

இந்த சிறிய மாற்றம் செய்த சில வாரங்களுக்குப் பிறகு, சிவப்பு வார்டில் பணியாற்றி வந்த சுகாதார பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது கணிசமாக குறைந்தது. பச்சை வார்டில் பணியாற்றுபவர்களுக்கு மத்தியில் எத்தனை பேருக்கு தொற்று ஏற்பட்டதோ, அந்த அளவுக்கு தான் சிவப்பு வார்டில் பணியாற்றியவர்களுக்கும் தொற்று ஏற்பட்டது. .

FFP3 முகக்கவசங்கள் கொரோனா நோயாளிகளிடம் இருந்தே 31 - 100% (பெரும்பாலும் 100 சதவீதம்) பாதுகாப்பு வழங்குகிறது என அவ்வாராய்ச்சியின் முடிவுகள் கூறுகின்றன.

மேலும் அவ்வாராய்ச்சியில், சர்ஜிக்கல் முகக்கவசங்கள், சுகாதாரப் பணியாளர்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க போதாது என்கிறது.

"FFP3 முகக்கவசங்கள், சர்ஜிக்கல் முகக்கவசங்களை விட செயல்திறன் மிக்கவை என்பதற்கு இந்த ஆராய்ச்சி சில உறுதியான ஆதாரங்களைக் கொடுத்திருக்கின்றன" என்கிறார் இவ்வாராய்ச்சியில் பணியாற்றிய மருத்துவர் மைக் வீக்ஸ். இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் என்.ஹெச்.எஸ். மருத்துவமனை ஃபவுண்டேஷன் ட்ரஸ்டைச் சேர்ந்தவர்.

"உண்மையில் இது சிறிய அளவில், ஒரே ஒரு ட்ரஸ்டில் நடத்தப்பட்ட ஒன்று. இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்த விஷயங்கள் மற்ற இடங்களிலும் பிரதிபலிக்கின்றனவா என்பதைப் பார்க்க வேண்டும்" என்கிறார் அவர்.

"ஒரு முன்னேற்பாடு நடவடிக்கையாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கவனித்துக் கொள்பவர்கள் அனைவரும் FFP3 முகக்கவசத்தை அணிவது குறித்து சிந்திக்க வேண்டும்" என்கிறார் மருத்துவர் மைக்.

தீவிரமடையும் பிரசாரம்

பிரிட்டன் முழுக்க கேம்பிரிட்ஜ் உட்பட 17 ட்ரஸ்டுகள், தேசிய கொள்கையில் கூறப்பட்டிருப்பதைத் தாண்டி, தங்களின் சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உடைகளை மேம்படுத்தி இருக்கின்றன.

FFP3 முகக்கவசங்கள் பரவலாக வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை பிரிட்டிஷ் மெடிகல் அசோசியேஷன் மற்றும் ராயல் காலேஜ் ஆஃப் நர்சிங் போன்ற பல்வேறு தொழில்முறையிலான அமைப்புகள் கோரி வருகின்றன.

காற்றில் கொரோனா வைரஸ் பரவுவதில் இருந்து பாதுகாப்பது தொடர்பாக உயர் தர பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என கோரி வருகிறார்கள்.

ஃப்ரெஷ் ஏர் என்.ஹெச்.எஸ். என்கிற மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்கள் குழு, புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பிரிட்டனின் சுகாதார செயலர் சஜித் ஜாவித்துக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்கள். அதில், தேசிய கொள்கை ஏன் மாற்றப்பட வேண்டும் என்பதற்கு இந்த புதிய ஆராய்ச்சி போதுமான ஆதாரங்களைக் கொடுத்திருக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

FFP3 முகக்கவசங்கள் சர்ஜிக்கல் முகக்கவசங்களைப் போல அத்தனை வசதியாக இல்லை என்கிற போதும், சுகாதார ஊழியர்கள், அதிக பாதுகாப்பு வழங்கக் கூடியவைகளையே விரும்புகிறார்கள் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

ராயல் காலேஜ் ஆஃப் நர்சிங்கின் தொற்று பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்தல் பிரிவின் தலைவர் ரோஸ் கலேகர் இந்த ஆராய்ச்சியை வரவேற்று இருக்கிறார். "இந்த முக்கியமான ஆராய்ச்சி, சுகாதாரப் பணியாளர்கள் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட வேண்டும், எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் சுவாசம் தொடர்பான சாதனங்களில் தொடர்ந்து சந்தையில் இருக்கும் ஆகச் சிறந்த பதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என ராயல் காலேஜ் ஆஃப் நர்சிங் தொடர்ந்து கூறி வருவதற்கு வலு சேர்ப்பதாக அமைந்திருக்கிறது" என்கிறார்.

"தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கூட கொரோனா தொற்று ஏற்படுவதைப் பார்க்கிறோம். சுகாதாரப் பணியாளர்கள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது. கொரோனா தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் தடைபடவோ கட்டுப்படுத்தப்படவோ இல்லை."

சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு உடை குறித்த தரக்கட்டுப்பாடுகள் அவ்வப்போது நவீன அறிவியலுக்கு தகுந்தாற் போல மாற்றப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

"என்.ஹெச்.எஸ். மற்றும் சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பு தான் எங்களின் முதல் குறிக்கோள். கொரோனாவுக்கு எதிரான போரில் முன்களத்தில் நின்று பணிபுரியும் முன்களப் பணியாளர்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு உடைகளை விநியோகிப்போம்.

"புதிதாக வரும் ஆதாரங்கள் மற்றும் தரவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் வழிமுறைகள் மாற்றி அமைக்கப்படும்" என கூறியுள்ளனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.