head


புதுடில்லிக்கான அமெரிக்க நிதியுதவியும் ஈழத்தமிழர்களும் -அ.நிக்ஸன்

|Tuesday, 06th July 2021|Political| Page Views: 1

சீன- ரஷிய நட்புறவு ஒப்பந்தம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு கடந்தவாரம் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவுடன் தொடர்ச்சியாக மேற்கொள்ளவுள்ள வர்த்தகச் செயற்பாடுகள் மற்றும் இராணுவ உதவிகள் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குளோபல் ரைம்ஸ் என்ற சீன ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு சென்ற புதன்கிழமை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சீனா- பாகிஸ்தான் வர்த்தக உடன்படிக்கையின் (China-Pakistan Free Trade Agreement-CPFTA) பிரகாரம் வர்த்தகச் செயற்பாடுகளை விரிவாக்குவது குறித்தும் அந்தக் கடிதத்தில் இம்ரான் கான் கூறியிருப்பதாக குளோபல் ரைம்ஸ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் கூறியுள்ளது.

இந்தவொரு நிலையில் இந்தியாவில் ஜம்மு விமானப்படை தளத்தில் ட்ரோன்கள் வழியாக சென்ற 27 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் பாகிஸ்தானிலிருந்து நடத்தப்பட்டதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் ‘பயங்கரவாதத்தால் உலகம் சந்திக்கும் சவால்கள்’ என்ற தலைப்பில் சென்ற செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய இந்திய மத்திய உள்துறை அமைச்சின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கான சிறப்பு செயலாளர் வி.எஸ்.கே. கமுடி, பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

அதேவேளை, கிழக்கு லடாக்கின் எல்லையில், இந்திய, சீனப் படைகள், கடந்த ஏழு மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுப் படைகள் விலக்கப்படாத நிலையில், மற்றுமொரு எல்லைப் பகுதியான ரேசாங்க் லா, ரேசின் லா, முகோஸ்ரி ஆகிய பகுதியில், சீனா, சென்ற புதன்கிழமை முதல் 35 பீரங்கிகளை தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் ஐ.நாவில் உரையாற்றிய கமுடி, இந்திய- சீன எல்லைப் பிரச்சினை குறித்து பிரஸ்தாபிக்கவில்லை. ஜம்மு விமானப்படை தளத்தில் நடந்த தாக்குதலுக்கு மாத்திரமே பாகிஸ்தான் மீது வசைபாடியிருந்தார்.

நவீன தொழில்நுட்பங்கள் தவறான செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் இதற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரிக்கை விடுத்த கமுடி, பாகிஸ்தான் மீது ஐ.நா தடைவிதிக்க வேண்டும் என்ற தொனியில் கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்.

ஏனெனில் அமெரிக்கா பாகிஸ்தான் இராணுவத்திற்கு 2004 ஆம் ஆண்டில் இருந்து வழங்கி வந்த நிதியுதவியை 2018 ஆம் ஆண்டு நிறுத்தியது. இரண்டு ஆண்டுகளுக்கு வழங்குவதில்லையென டொனால்ட் ட்ரம்ப் நிறுத்திய அந்த நிதியுதவியை ஜோ.பைடன் தலைமையிலான அமெரிக்கா இந்த ஆண்டு வழங்குமென பகிஸ்தான் நம்பியிருந்தது. ஆனால் ஜே பைடன் நிர்வாகமும் நிதியை நிறுத்தியுள்ளது.

ஜே பைடனின் இச் செயற்பாட்டில் நம்பிகைவைத்து பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற தொனியில் கமுடி ஐ.நாவில் பேசியிருக்கலாம். 2004 ஆம் ஆண்டு பாகிஸ்தானைக் கூட்டாளி நாடென காங்கிரஸில் அதிகாரபூர்வமாக அறிவித்த அமெரிக்கா, தற்போது பாகிஸ்தான்- சீன உறவு நெருங்கி வருவதாலேயே அந்தக் கூட்டாளி உறவைக் கைவிடும் நிலைக்கு வந்ததுள்ளது.

ஆனாலும் இந்தோ- பசுபிக் பிராந்திய விவகாரத்தில் அமெரிக்க நலன்சார்ந்து இந்தியாவோடு இன்னும் பேரம் பேச வேண்டி தேவையிருப்பதால், பாகிஸ்தான் நாட்டைக் கூட்டாளி உறவில் இருந்து விலக்குவதாக அதிகாரபூர்வமாக காங்கிரஸில் அறிவிக்காமல் அமெரிக்கா இழுத்தடிக்கிறது.

ஏனெனில் ரஷியா சீனாவுடன் உறவைப் பேணும் உடன்படிக்கையில் கடந்த வாரம் கைச்சாத்திட்டாலும், இந்தியாவுடனும் உறவைப் பேண ரஷியா கடந்த பல ஆண்டுகளாக விரும்புகின்றது. ஆனால் ரஷியாவோடு இந்தியா உறவைப் பேண அமெரிக்கா விரும்பவில்லை. இதன் காரணத்தினாலேதான் பாகிஸ்தான் இராணுவத்துக்கு அமெரிக்கா நிதியுதவியை அப்போது வழங்கியதெனலாம்.

ஆனால் டொனால்ட் ட்ரமப்பின் காலத்தில் நரேந்திரமோடியுடன் இருந்த நெருக்கமான உறவினால் 2018 ஆம் ஆண்டு அந்த நிதியுதவி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. எனினும் ஜோ பைடன் நிர்வாகமும் அந்த நியை வழங்காமல் மேலும் அந்தத் தடையை நீடித்திருக்கிறது.

பயங்கரவாதத்துக்கு எதிரான செயல்பாடுகளில் பாகிஸ்தானிடம் மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லையெனவும் அதனால் ராணுவ நிதியுதவி நிறுத்தத்தை இந்த ஆண்டும் தொடர முடிவு செய்திருப்பதாகவும் அமெரிக்க இராணுவ தலைமையகமான, பென்டகனின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கடந்த வாரம் கூறியிருக்கிறார்.

ஆக இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் உறுதியான பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு அணுகுமுறைகளில் இந்தியாவுடனான உறவு மேலும் நெருக்கமாக வேண்டுமென அமெரிக்கா விரும்புவதையே இது காட்டுகின்றது.

ஆனாலும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழிலில் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியாவைக் கடந்து அமெரிக்கா இல்ங்கையோடு நேரடியாக உறவைப் பேண வெண்டுமென்ற சிங்கள ஆட்சியாளர்களின் உணர்வுக்கும் அமெரிக்கா மதிப்பளித்திருப்பதைச் சமீபகால நகர்வுகள் கோடிகாட்டுகின்றன.

சீன- ரஷிய உறவு, சீன- பாகிஸ்தான் உறவு வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அதன் நீட்சியாக சீன- இலங்கைப் பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளும் நாளுக்கு நாள் புதுப்பிக்கப்படுகின்றன. எதிர்க்கட்சிகள், பொளத்த குருமார் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டாலும், இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மை மற்றும் பௌத்த மரபுகள் பேணப்பட்டவொரு நிலையிலேயே சீன- இலங்கை உறவு பலமடைய வேண்டுமென எதிர்க்கட்சிகள் அறிவுரை கூறுகின்றன.

இதன் பின்னணியில், கோட்டபய ராஜபக்சவின் ஆட்சி மாறினாலும் சீன- இலங்கை உறவுக்குத் தடையிருக்காதென்பது கண்கூடு. ஆகவே தமிழ்த்தேசியக் கட்சிகள் இலங்கையில் அதுவும் வடக்குக் கிழக்கில் சீன ஆதிக்கம் அதிகரித்து வருவதாகக் கூறி சீனாவுடன் பகைமையைச் சம்பாதித்துவிடக்கூடாதென்பதையே மேற்படி புவிசார் அரசியல் சூழல் கற்பிக்கின்றது.

ஏனெனில் இந்துமா சமூத்திரத்தில் தன்னையும் அங்கத்துவ நாடாகச் செயற்கையான முறையில் வடிமைத்து நிறுவிக் காண்பித்துள்ள சீனாவுடன், இந்தியா உலகில் முதன்மையான பொருளாதார உறவை வளர்த்துள்ளது. இந்திய அயல் நாடுகளான நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ;, மலைதீவு மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் பொருளாதாரத் திட்டங்களைப் பலப்படுத்தியுள்ள சீனா தனது முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களை சர்வதேச வர்த்தகத்துக்குப் பயன்படுத்தவுவும் அனுமதியளித்துள்ளது.

ரஷியாவுடன் மேலும் ஐந்து ஆண்டுகளுக்குச் சீனா கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தத்தில், ஆசிய நாடுகளில் வர்த்தகச் செயற்பாடுகளுக்கும் இராணுவ மூலோபாயங்களுக்கும் எந்த அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்குவதென்பது குறித்த விடயங்கள் உள்ளடங்கியிருப்பதாக குளோபல் ரைம்ஸ் என்ற சீன ஆங்கில செய்தித் தளம் கூறுகின்றது.

இதன் காரணத்தினாலேதான் அவசர அவசரமாக இலங்கையில் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ளும் பேச்சுக்களை இலங்கை முதலீட்டுச் சபையோடு யூன் மாதம் ஒன்பதாம் திகதியில் இருந்து இந்தியா உரையாடி வருகிறது.

இலங்கையில் சீன முதலீடுகளை இந்தியா ஒருபோதும் எதிர்க்காதென இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த ஜனவரி மாதம் கொழும்பில் வைத்துக் கூறியிருந்தார். ஆனால் சீனாவின் ஆளுகைக்குள் இலங்கையின் இறைமை செல்வதை அனுமதிக்க முடியாதெனவும் அவர் அடித்துக் கூறியிருந்தார்.

இதே கருத்தையே அமெரிக்காவும் வெளியிட்டிருக்கிறது. இலங்கையின் இறைமை ஆள்புல ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்மென அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் கொழும்பில் வைத்து வலியுறுத்தியிருந்தார்.

அதாவது சீனாவிடம் இலங்கை அரசு முழுமையாக அடிபணிந்து விடக்கூடாதென்ற எச்சரிக்கையும், ஈழத்தமிழர்களும் இலங்கை ஒற்றையாட்சிக்குள் அரசியல்தீர்வை ஏற்க வேண்டுமென்ற கோணத்திலுமே மைக் பொம்பியோ அவ்வாறு கூறியிருந்தார் என்பதையும் எவரும் புரிந்துகொள்ள முடியும்.

ஆகவே 2009 ஆம் ஆண்டுக்கு மே மாதத்திற்குப் பின்னரான புகோள மற்றும் புவிசார் அரசியல் அணுகுமுறையில், இலங்கை சீனாவிடம் அதிகளவு கடன்களை பெற்றாலும், அதிகளவு பொருளாதாரத் திட்டங்களுக்குச் சீனாவுக்கு முன்னுரிமை கொடுத்தாலும் அமெரிக்காவுக்கு அது பிரச்சினை அல்ல.

ஆனால் இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரத்தில் அமெரிக்க- இந்தியா நலன் சாhந்து இலங்கை நிற்க வேண்டுமென்ற அழுத்தங்களும் அதற்கேற்ப ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களை அப்படியே கைவிட்டுவிடுகின்ற போக்கையுமே அமெரிக்கா தற்போது கையாளுகின்றது. இதே உத்தியைத் தான் இந்தியாவும் கடந்த மாதத்தில் இருந்து கையாள ஆரம்பித்திருக்கின்றது.

அடுத்த வாரம் இந்தியப் பெறுமதியில் 307 கோடி ரூபாவை கொரோன தடுப்புச் செயற்பாட்டுக்காக அமெரிக்கா வழங்கவுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு அமைப்பு சென்ற புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஏற்கனவே 150 கோடி ரூபா வழங்கப்பட்டதெனவும் இந்த ஆரம்ப உதவி அமெரிக்க இந்திய உறவுக்கு வலுச்சேர்க்குமென்றும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க ஆதரவுடன் கடந்த ஆண்டு மே மாதம் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை உலக வங்கி வழங்குவதாக உறுதயளித்தது. அதில் ஒரு பில்லியன் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவுக்குக் கடந்த ஆண்டு ஏப்ரல் ஆறாம் திகதி ரூ.21.75 கோடி நிதியுதவியை அமெரிக்காவும் வழங்கியிருந்தது. கடந்த 16 மாதங்களில் ரூ.44.25 கோடி நிதியுதவி அமெரிக்காவினால் வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனா தடுப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக இந்த உதவி வழங்கப்பட்டதென புதுடில்லியில் உள்ள அமெரிக்கத் தூதுவர் கூறியிருந்தார்.

ஆனால், சென்ற யூன் மாதம் ஜி-7 மாநாட்டில் இந்தியாவுக்கு அதிகளவு நிதியை வழங்குவதென அமெரிக்கா எடுத்த முடிவு இந்தோ- பசுபிக் பாதுகாப்பை நேர்க்கமாகக் கொண்டது.

ஆகவே இந்தோ- பசுபிக் விவகாரம் அமெரிக்க- சீன மோதலாகவே மாறியுள்ளது. சீன இந்திய முரண்பாடு வெறுமனே எல்லைப் பிரச்சினை மாத்திரமே. இதனால் தமிழ்த்தேசியக் கட்சிகள் இந்த நகர்வுகளை அறிவுபூர்வமாக உணர்ந்தே கருத்துக்களை வெளியிட வேண்டும்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.