head


சீனாவை எதிர்கொள்ளல் - அ.நிக்ஸன்

|Friday, 16th July 2021|Political| Page Views: 1

இந்தியா- சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளும் செய்து கொண்ட சீக்கா எனப்படும் விரிவான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடானது (Comprehensive Economic Cooperation Agreement (CECA) தொடர்பாகக் கடந்த செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர் பாராளுமன்ற்தில் இடம்பெற்ற விவாதத்தில் சூடான விவாதம் இடம்பெற்றது.

அதிகளவு இந்தியர்கள் பிரதான வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதாகவும் எந்தவிதமான இடையூறுகளுமின்றி சிங்கப்பூருக்கு வந்து செல்வதாகவும் குற்றம் சுமத்தாப்பட்டது.ஆனால் ஆளும் கட்சி அந்தக் குற்றச்சாட்டை மறுத்தது. இந்திய நிபுணர்கள் எந்த நிபந்தனையும் இன்றி சிங்கப்பூருக்கு வர அனுமதி வழங்கவில்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் பாராளுமன்றத்தில் கூறிச் சமாதானப்படுத்தினார்.

இந்தியர்களுக்கு எதிரான சிங்கப்பூர் மக்களின் எதிர்ப்புகளை ஆளும் சிங்கப்பூர் அரசாங்கம் சமாளித்து சீக்கா உடன்படிக்கையைத் தொடருவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது.

தமது தொழில் வாய்ப்புகளும் தமது நிபுணத்துவ அறிவும் புறக்கணிக்கப்படுவதாகவே சிங்கப்பூர் பிரஜைகள் உணர்ந்திருக்கின்றனர். தமது தொழில் உரிமை மறுக்கப்படுவதாகவே சிங்கப்பூர் மக்கள் தமது எதிர்ப்பைக் காண்பித்திருக்கின்றனர். இந்தியாவின் தொழில்சார் அறிவைப் பெறுவதில் பிரச்சினையில்லை.ஆனால் ஆதிக்க நோக்குடனும் புவிசார் அரசியல் போட்டியோடும் தமது மக்களுக்குரிய நிபுணத்துவ அடிப்படையிலான தொழில் முயற்சிகள் புறக்கணிக்கப்படக்கூடாதென்ற நோக்கிலும் சிங்கப்பூர் அரசாங்கம் தமது நிலைப்பாட்டை மறுபரிசீலணை செய்யுமளவுக்குப் பங்குவமான மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

ஆகேவே ஒரு அரசை அதுவும் வல்லரசு நாடாடொன்றுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை ரத்துச் செய்யாமலும் தமது மக்கள் பாதிக்கப்படாமலும் அதேவேளை வல்லரசு நாட்டுப் பிரஜைகளின் நிபுணத்துவத்தைத் தமது நாட்டுக்குப் பெற்றுக்கொள்ளுகின்ற உத்திகளையும் சிங்கப்பூர் கையாண்டு வருகின்றது.

இலங்கையும் 2016 ஆம் ஆண்டு இந்தியாவுடன் இதுபோன்றதொரு உடன்படிக்கையை கைச்சாத்திட முற்பட்டுத் தோல்வியில் முடிவடைந்தது. எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தகவல் தொழில்நுட்பங்களைப் பரிமாற்றிக் கொள்வதங்கான கூட்டு உடன்படிக்கை (Economic And Technology Cooperative Agreement- ETCA) ஒன்றைச் செய்ய முற்பட்டபோது, எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. மகிந்த ராஜபக்சவை மையப்படுத்தி அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஜே.வி.பி மற்றும் பௌத்தகுருமார் கடுமையாக எதிர்த்தால் அந்த உட்னபடிக்கை கைவிடப்பட்டது.

எட்கா உடன்டிக்கையை எதிர்க்கட்சிகளும் பௌத்த குருமாரும் எதிர்த்ததை அன்று சிங்கள ஆங்கில ஊடகங்கள்கூட ஆதரித்தன. 2005 ஆம் ஆண்டு சிங்கப்பூர் இந்தியாவுடன் செய்து கொண்ட சீக்கா உடன்படிக்கையைப் பயன்படுத்திச் சிங்கப்பூருக்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப அறிவுகள் மற்றும் பொருளாதார நிபுணத்துவச் செயற்பாட்டுப் பொறிமுறைகளை எவ்வாறு பெற்றுக் கொண்டு வருகின்றதோ, அதேபோன்றதொரு அணுகுமுறையை இந்தியாவுடன் இணைந்து இலங்கையும் செய்ய வேண்டுமென்ற சிந்தனை சிங்கள ஆங்கில ஊடகங்களுக்கு இருக்க்வில்லை.

ஆனால் சீனாவின் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை சிங்கள ஆங்கில ஊடகங்கள் மிகப் பெரிய குற்றமாக விமர்சிப்பதில்லை. சிங்கள எதிர்க்கட்சிகள்கூட சீனாவின் பொருளாதாரத் திட்டங்களை வரவேற்கின்றன. ஆனால் இலங்கையின் இறைமை பிரிபடக்கூடாது அல்லது இறைமையில் சீனா கைவைக்கக்கூடாதென்ற உணர்வுகள் உண்டு. ஆகவே ஒரு அரசுக்கான அல்லது இன்னுமொரு வல்லரசுக்கான எதிர்ப்பை உள்ளூர் மக்கள் எந்த அடிப்படையில் தெரிவிக்கலாம் எப்படி எதிர்ப்பை வெளியிடலாம் என்றொரு விதிகள் இல்லை.ஆனால் ஏன் எதிர்க்கிறோம் என்பதற்கான உணர்வுகளை புரியும்படி செய்வதுதான் அரசியல் கட்சிகளின் வேலை. அதைத்தான் சிங்களக் கட்சிகள் செய்கின்றன.

சிங்கப்பூர் மக்கள் இந்தியாவுடனான சீக்கா உடன்டிக்கையை எதிர்ப்பது போன்று காண்பித்து அதனை ரத்துச் செய்யாமல் அந்த உடன்படிக்கையின் மூலமான பலாபலன்களை பெறுகிறார்கள். அதனால் அந்த நாடு வளர்ச்சியடைகிறது. ஆனால் இந்தியாவுடனான இலங்கையின்; எதிர்ப்பு அப்படியானதல்ல. கலாச்சார நோக்கில் இந்தியா தமிழர்களுக்கான நாடு என்றொரு கற்பனை கலந்த அச்சம் சிங்கள மக்களிடையே உண்டு.அதனாலேயே எட்கா உடன்படிக்கை, கொழும்புத் துறைமுகக் கிழக்கு முனைய அபவிருத்த Pஉள்ளிட்ட பல உடன்படிக்கைகளை சிங்கள ஆட்சியாளர்கள் கைவிட்டார்கள். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கதியும் அதுதான்.

சீனாவை பௌத்த கலச்சார உறவோடும் பொருளாதார ரீதியிலும் சிங்கள மக்கள் ஆதரிக்கின்றனர் என்பதையே 1972 ஆம் ஆண்டு சிறிமோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் அமைக்கப்பட்ட நாளில் இருந்து காண்கிறோம். ஆக 19983 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை இல்லாதொழிக்கும் வரையான காலப்பகுதி வரையுமே சிங்கள ஆட்சியாளர்களுக்கு இந்தியா தேவைப்பட்டது.கடந்த பதினொரு ஆண்டுகள் சிங்கள மக்களின் இந்தியா தொடர்பான மன நிலையும் அதன் நீட்சியான எதிர்ப்புச் செயற்பாடுகளும் இலங்கையில் இந்தியாவின் செல்வாக்குக் குறையக் காரணமானது.

சிங்கள ஆட்சியாளர்கள், சிங்கள அரசியல் கட்சிகள் மற்றும் பௌத்த குருமார் ஆகியோரின் தொடர்ச்சியான எதிர்ப்பும் அதற்குரிய அரசியல் வேலைத் திட்டங்களும் இன்று இந்தியா என்றொரு வல்லரசைப் புறந்தள்ளி, அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளோடும் சீனாவுடனும் சமாந்தரமாக உறவைப் பேணும் அளவுக்கு சிங்களத் தேசியம் ஒரு தேசமாத எழுந்திருக்கிறது.

இறைமை உள்ள அரசு என்றொரு கட்டமைப்பு 1972 இல் சிங்கள மக்களுக்குக் கிடைத்தால் சாதகமாக அமைந்ததெனக் காரணம் கூறினாலும், ஒரு தேசமாக எழுச்சி பெறவேண்டுமென்ற உணர்வு ஈழப்போர் ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை தொடர்கிறது. சிங்கள ஆட்சியாளர்கள் தமக்குள் முரண்பட்டாலும் மேற்கு நாடுகளின் புவிசார் அரசியல் போட்டிகளை இலங்கைக்குச் சாதகமாகப் பயனபடுத்த வேண்டுமென்ற அறிவுசார் பக்கபலம் சிங்கள ஆங்கில ஊடகங்களினாலும் துறைசார்ந்த சிங்களப் பேராசிரியர்களினாலும் கொடுக்கப்படுகின்றன.

இந்தியாவை எதிர்த்தும் சீனாவை எதிர்க்காமலும் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளை எதிர்ப்பது போல ஒப்பாசாரத்துக்கு எதிர்த்துச் சமாந்தரமான இராஜதந்திர உறவுகளை சிங்கள ஆட்சியாளர்கள் பேணுகின்றனர்.

அதேபோன்று ஏனைய ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பூட்டான் மற்றும் கசக்ஸ்தான் நாடுகள் தமது நாடுகளின் மீதான சீன ஆதிகத்தை எதிர்க்கிறார்கள். ஆனால் சீனாவின் பொருளாதார நிபுணத்துவதைப் பரிமாற்றிக் கொள்கின்றனர். வர்த்தகச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.தென் சீன கடல் பகுதியில், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடும் கடல் பகுதியில், கடந்த ஒரு மாதத்தில் 200க்கும் மேற்பட்ட சீன மீன்பிடி படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு, பிலிப்பைன்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின், பலாவன் மாகாணத்தின் மேற்கு பகுதியில் இருந்து, 324 கி.மீ. தொலைவில், தென் சீன கடல் பகுதியை, சீனா- உரிமை கோருகின்றது. அதாவது சீனா- பிலிப்பைனஸ் இடையே உள்ள கடலில் அமைந்த ஸ்பார்ட்டிலி தீவு மற்றும் ஸ்கார்பாரோ சோகல் ஆகிய தீவுகளை சீனா உரிமை கோருகின்றது.கடல் வளங்கள் நிறைந்த இந்த பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பாக, இரு நாடுகளும் முரண்பாடுகின்றன. இதனால் பிலிப்பைன்ஸ் மக்கள் சீன ஆக்கிரமிப்பை எதிர்க்கிறார்கள், போராடுகிறார்கள். ஆனால் சீனாவின் வர்த்தக மற்றும் பொருளாதார உதவிகளைப் பிலிப்பைன்ஸ் பெறுகிறது. ஆனாலும் சீனப் பொருட்களைக் கொள்வனவு செய்வதை பிலிப்பைன்ஸ் நிறுத்தியுள்ளது.

தென் சீனக் கடலில் அமைந்த இந்தோனேசியாவிற்குச் சொந்தமான தீவுப்பகுதிகளை சீனா உரிமை கோருகின்றது. இதனால் இந்தோனேசியாவில் சீனர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு வளர்ந்து வருகிறது.

1998 ஆம் ஆண்டு இந்தோனேசிய ஜனாதிபதி சுகார்த்தோ பதவி நீக்கப்பட்டப் பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுக் கலவரத்தில், இந்தோனேசியாவில் வாழ்ந்த சீனர்களின் வர்த்தக நிறுவனறங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சீனாவுக்கு எதிராக வன்முறைகளும் அகிம்சைப் போராட்டங்களும் இன்றுவரை இடம்பெறுகின்றன..

சீனா மீது பூடான் அரசுக்கும் நல்லுறவு இருந்ததில்லை. 1959-ஆம் ஆண்டில் திபெத்தை சீனாவுடன் இணைத்த பி;ன்னர். சீனாவுக்கு எதிரான திபெத்தியர்களின் கிளர்ச்சியின் போது தலைநகரம் லாசாவில் பௌத்த விகாரைகள், பௌத்த கல்வி நிலையங்கள் இடித்து அழிக்கப்பட்டன.

இதனால் பூடான் மக்களுக்கு சீனா மீது இன்று வரை வெறுப்புணர்வு உண்டு. வர்த்தக்ச் செயற்பாடுகள் இருந்தாலும் பூட்டான் சிறிய நாடென்ற முறையில் அங்கு சீனா கால் பதிக்க முடியாத அளவுக்கு எதிர்ப்பு உண்டு. 1960 ஆண்டு சீனா வெளியிட்ட வரைபடத்தில், பூடான் சீனாவின் ஒரு பகுதியாகக் காண்பிக்கப்பட்டிருந்தது. இதனால் சீனா மீது பூடான் மக்கள் தங்கள் வெறுப்புணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.

2018 ஆம் ஆண்டு கசக்ஸ்தான் நாட்டில் சீனா கனிம வளங்களை எடுப்பதற்கு வசதியாக கசக்ஸ்தான் அரசு நில சீர்திருத்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனை கசக்ஸ்தான் மக்கள், தமது அரசாங்கத்துக்கும் சீன நிறுவனங்களுக்கும், எதிரான போராட்டங்களை நடத்தினர். சீன நாட்டின் சிஞ்சியாங் மாகாணத்தில் வாழும் உய்குர் இஸ்லாமியப் பழங்குடி மக்களுக்கு எதிராகச் சீன அரசு நடத்தும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் சீனா மீது கசக்ஸ்தான் மக்கள் வெறுப்புணர்வு கொண்டுள்ளனர். இந்த இரு நாடுகளுக்கிடையேயும் வர்த்தகச் செயற்பாடுகள் கூடப் பெரியளவில் இல்லையெனலாம்.

இதேவேளை, சீனாவின் கோர முகத்தை நினைவூட்டும் தியனன்மென் சதுக்கம் படுகொலை (1989 Tiananmen Square Protests) நினைவு நாள் கடந்த யூன் மாதம் தலைநகர் பீஜங்கில் நடைபெற்றது. 1989 ஆம் ஆண்டு ஜனநாயக கோரிக்கையுடன் சீனாவில் ஒரு மகத்தான இயக்கம் இயங்கியது. சீனாவின் சீர்திருத்தவாதியான ஹ யோபாங்கின் மறைவில், சதி உள்ளதாக, ஜனநாயக ஆதரவு மக்கள் சந்தேகித்தனர்.

அப்போதைய சீன கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். சுமார் 10 ஆயிரம் மக்கள் சீனா இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.32 ஆண்டுகளின் பின்னர் இந்த நினைவு நாள் சென்ற யூன் மாதம் அனுஷ;டிக்கப்பட்டதுடன் சீனாவின் உல ஆக்கிரமிப்புகள் மற்றும் ஊடக சுதந்திரம் மற்றும் உய்குர் இஸ்லாமிய மக்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கப்பட்டது.

ஆகவே இதன் பின்னணியில் ஈழத்தமிழர்கள் வடக்குக் கிழக்கில் சீன முதலீடுகள் குறித்துச் சிந்திக்கலாம். ஆனால் அமெரிக்க, இந்திய அரசுகளின் தேவைக்கு ஏற்ப எதிர்ப்புகள் அமையக்கூடாது. அத்துடன் பௌத்த தேசியத்தை உள்வாங்கிச் சீனாவும் வடக்குக் கிழக்கில் பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுக்க முடியாதென்ற கருத்துக்கள் உணர்த்தப்பட வேண்டும்.

அரசு என்றொரு கட்டமைப்பு இல்லாதவொரு நிலையில், அரசியல் விடுதலை கோரிப், போரினால் பாதிக்கப்பட்ட தேசிய இனமாக ஈழத்தமிழர்கள் தம்மை வெளிப்படுத்தும்போது சீனா போன்ற வல்லரசுகள் அதனைப் புறம்தள்ள முடியாது. இந்தியத் தூதுவரைச் சந்திக்க முற்படும் வேகம் சீனத் தூதுவரைச் சந்திப்பதிலும் இருக்க வேண்டும்.இந்தியப் பொருளாதாரத் திட்டங்களுக்கு எதிரான சிங்கள அரசியல் கட்சிகளின் போராட்டங்களை ஜனநாயகமாகவும், சீனாவுக்கு எதிரான மென்போக்கு எதிர்ப்புகளை அன்பாகவும் சித்தரிக்கும் சிங்கள ஆட்சியாளர்கள், ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கையைப் பயங்கரவாதமகக் காண்பிக்கும் அநியாயம் பற்றியும் உரத்துச் சொல்ல வேண்டும்
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.