head


விண்வெளி யுகத்தின் மைல்கற்கள் - ஆசை

|Saturday, 17th July 2021|General| Page Views: 1

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் பிரிட்டனைச் சேர்ந்தவருமான ரிச்சர்ட் பிரான்ஸன் கடந்த ஞாயிறு அன்று தனது சகாக்களுடன் புவியின் சுற்றுப்பாதை வரை சென்றுவிட்டுத் திரும்பியிருக்கிறார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது இந்தப் பயணம். ரிச்சர்ட் பிரான்ஸனின் யூனிட்டி ராக்கெட் விமானம், புவியிலிருந்து 86 கிமீ உயரம் வரை பறந்து சென்றது. அங்கே விமானக் குழுவினர் 4 நிமிட நேரம் புவியீர்ப்பு விசை இல்லாத நிலையை அனுபவித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். இதுவரை விண்வெளிக்கு நூற்றுக்கணக்கான விண்வெளி வீரர்கள் பயணித்திருக்கிறார்கள். விண்வெளி வீரர் அல்லாதவர்களும் பயணித்திருக்கிறார்கள்.

அமெரிக்கச் செல்வந்தரான டெனிஸ் டிட்டோ 2001-ல் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்றபோது, அவர்தான் பணம் கொடுத்து விண்வெளிக்குச் சென்ற முதல் நபர் என்ற பெருமையை அடைந்தார். இதற்காக அவர் செலவிட்ட தொகை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 150 கோடி. தற்போது பிரான்ஸனின் விண்வெளிப் பயணம் விண்வெளிச் சுற்றுலா என்ற புதுச் சந்தையின் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது. 2022-ல் விண்வெளிச் சுற்றுலா செல்வதற்காக பிரான்ஸனின் நிறுவனத்திடம் 500-க்கும் மேற்பட்டோர் இந்திய மதிப்பில் தலா ரூ. 1,86,20,750 தொகையைக் கொடுத்து முன்பதிவு செய்திருக்கிறார்கள். இந்தச் சமயத்தில், மனிதர்களின் விண்வெளித் தேடலின் முக்கியமான தருணங்களுள் சிலவற்றை நினைவுகூரலாம்.

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cine... Tamil Daily Newspaper Website. Tamil News updates, Business News in Tamil, Sports News in Tamil, Tamil Newspaper...

முதல் செயற்கைக்கோள்: முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக் 1-ஐ சோவியத் ரஷ்யா அக்டோபர் 4, 1957 அன்று பறக்கவிட்டது விண்வெளி யுகத்துக்கும், அந்நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான விண்வெளிப் பந்தயத்துக்கும் வித்திட்டது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட பொருள் ஒன்று விண்வெளிக்குச் சென்றது அதுவே முதன்முறை. ஸ்புட்னிக் என்றால், ரஷ்ய மொழியில் ‘சக பயணி’ என்று பொருள். கரோனா தடுப்பு மருந்துக்கும் தங்கள் பெருமைக்குரிய பெயரான ‘ஸ்புட்னிக்’கையே ரஷ்யா சூட்டிக்கொண்டதில் வியப்பில்லை.

நிலவில் முதல் கலம்: விண்வெளியில் புவியைத் தவிர்த்த ஒரு விண்பொருளில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற பெயரை சோவியத் ரஷ்யாவின் லூனா 2 பெற்றது. இது ஆளற்ற விண்கலம். செப்டம்பர் 14, 1959 அன்று இந்தச் சாதனையை லூனா 2 புரிந்தது. மனித அறிவின் கரங்கள் எவ்வளவு தூரம் நீளும் என்பதை உலகுக்கு உணர்த்திய நிகழ்வு இது.

விண்வெளி நாயகன் யூரி ககாரின்: நவம்பர் 3, 1957-ல் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் லாய்க்கா என்ற நாயை சோவியத் ரஷ்யா அனுப்பியது. விண்கலம் திரும்பிவந்தபோது, அந்த நாய் இறந்திருந்தது. இதற்குப் பிறகு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் 4 ஆண்டுகள் கழித்து சோவியத் ரஷ்யா வெற்றிபெற்றது. ஏப்ரல் 12, 1961-ல் அனுப்பப்பட்ட வோஸ்டோக் 1 விண்கலத்தில் சென்ற யூரி ககாரின்தான் விண்வெளியில் பறந்த முதல் மனிதர் என்ற சாதனையைப் புரிந்தார். புவியின் சுற்றுப்பாதையில் யூரி ககாரின்னைச் சுமந்துகொண்டு அந்த விண்கலம் 108 நிமிடங்கள் சுற்றியது. ஒரே நாளில் யூரி காகரின் சோவியத் நாயகனாகவும் உலக நாயகனாகவும் (!) ஆனார்.

முதல் விண்வெளிப் பெண்: ஜூன் 16, 1963 அன்று வோஸ்டோக் 6 விண்கலத்தில் சென்றதன் மூலம் ‘விண்வெளிப் பயணம் மேற்கொண்ட முதல் பெண்’ என்ற பெயரைப் பெற்றார் சோவியத் ரஷ்யாவின் வேலன்டினா டெரெஷ்கோவா. ஏனைய துறைகளைப் போல விண்வெளித் துறையிலும் ஆண்களின் ஆதிக்கமே நிலவிவருகிறது. இதுவரை சுமார் 570 பேர் விண்வெளிக்குச் சென்றிருக்கிறார்கள், இவர்களில் 67 பேர்தான் பெண்கள்.

பெரும் பாய்ச்சல்: அதுவரையிலான விண்வெளிப் பந்தயத்தில் சோவியத் ரஷ்யாவே முன்னணியில் இருந்தாலும், நிலவுக்கு மனிதனை அனுப்பி அமெரிக்கா முந்திக்கொண்டது. ஜூலை 20, 1969 அன்று அப்போலோ 11 விண்கலத்தில் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் என்ற பெயரைப் பெற்றார். அப்போது, “இது ஒரு மனிதன் எடுத்துவைத்த சிறிய காலடி. ஆனால், மனித குலத்தின் பெரும் பாய்ச்சல்” என்று அவர் அங்கிருந்து பேசியதை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பெருவியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

நீண்ட தொலைவு மனிதப் பயணம்: மிக அதிகத் தொலைவு பயணித்தவர்கள் என்ற சாதனையை நாஸாவின் அப்போலோ 13 திட்டக் குழுவினர், ஏப்ரல் 1970 அன்று புரிந்தனர். நிலவின் மறுபக்கத்துக்கு அவர்கள் சென்றபோது, புவியிலிருந்து 4,00,171 கிமீ தொலைவில் இருந்தார்கள். மனிதர்கள் அனுப்பிய செயற்கைக்கோள்கள் இதைவிடப் பல மடங்கு தூரம் பயணித்திருந்தாலும் மனிதர்கள் பயணித்த அதிகபட்சத் தொலைவு இதுதான். 51 ஆண்டுகள் ஆகியும் இந்தச் சாதனை முறியடிக்கப்படவில்லை.

வாயேஜர்களின் அண்டப் பயணம்: நாற்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சூரியக் குடும்பத்தின் புறப் பகுதியில் உள்ள கோள்களைத் துழாவுவதற்கு மணிக்கு சுமார் 38 ஆயிரம் மைல் வேகத்தில் வாயேஜர்-2, வாயேஜர்-1 என்ற இரண்டு துழாவிகளை (probes) நாஸா அனுப்பியது. எழுபதுகளின் இறுதியில் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் குறிப்பிட்ட அமைவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டது. அருகருகே அப்படி 175 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இந்தக் கோள்கள் அமையும் என்பதால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அந்தக் கோள்களை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்டவை அந்தத் துழாவிகள். இந்தத் துழாவிகளுள் இரண்டாவதாக அனுப்பப்பட்ட வாயேஜர்-1 தன் அக்காவையும் முந்திக்கொண்டு முன்னே சென்றுகொண்டிருக்கிறது. 1,419,53,30,000 மைல் தொலைவைக் கடந்து இன்னமும் பயணித்துக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் உருவாக்கிய பொருட்களில், சூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்ற முதலாவது பொருள், விண்மீன்களுக்கு இடைப்பட்ட வெளியில் பயணிக்கும் முதலாவது பொருள் என்ற புகழை 2012 ஆகஸ்ட் 25 அன்று வாயேஜர்-1 பெற்றது.

பேரண்டத்தைப் பார்க்கும் கண்கள்: ஏப்ரல் 25, 1990-ல் விண்வெளியில் அமைக்கப்பட்ட ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி, மனித குலத்தின் விண்வெளித் துழாவலில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. அதுவரை நாம் அறிந்திருந்த பிரபஞ்சத்தின் எல்லையை அது மேலும் நகர்த்தியது. பிரபஞ்சம் விரிந்துகொண்டிருப்பது, பிரபஞ்சத்தின் வயது, கருந்துளைகள் போன்றவை குறித்து மகத்தான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக்கொண்டிருக்கும் தொலைநோக்கி அது.

சர்வதேச விண்வெளி நிலையம்: 2000-ல் கட்ட ஆரம்பித்து, 2011-ல் முடிக்கப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம்தான் விண்வெளியில் மனிதர்கள் உருவாக்கிய மிகப் பெரிய கட்டுமானம். சர்வதேச விண்வெளி நிலையம் புவியை ஒரு நாளைக்கு 16 முறை சுற்றிவருகிறது.

இந்தியாவின் விண்வெளிச் சுவடுகள்: வல்லரசு நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா தாமதமாகவே விண்வெளி ஆராய்ச்சிக் களத்தில் குதித்தது. இந்தியாவின் முதல் விண்கலமான ஆர்யபட்டாவை இஸ்ரோ உருவாக்கியிருந்தாலும் அதைச் செலுத்தியது சோவியத் ரஷ்யாதான். அந்தப் புள்ளியிலிருந்து இந்தியா இன்று அடைந்திருக்கும் வளர்ச்சி வியக்க வைப்பது. ஒளிபரப்பு, தகவல்தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை, புவியிடமறிதல், தொலைமருத்துவம், தொலைதூரக் கல்வி என்று சாதாரண மனிதர்கள் அனைவருக்கும் தொடர்புடைய சேவைகளை இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்கள் சாதித்திருக்கின்றன. நிலவைச் சுற்றும் கலமான சந்திரயான்-1-ஐ 2008-ல் இஸ்ரோ அனுப்பியது.

2013-ல் செவ்வாயைச் சுற்றுவதற்கு மங்கள்யானை அனுப்பியது. இதில் சிறப்பு என்னவென்றால், செவ்வாயைப் பொறுத்தவரை தனது முதல் முயற்சியிலேயே இப்படி வெற்றிபெற்ற முதல் நாடு இந்தியாதான். 2016-ல் இஸ்ரோ 20 விண்கலங்களை ஒரே ஏவுகலத்தின் மூலம் ஏவியது. 2017-ல் ஒரே ஏவுகலத்தின் மூலம் 104 விண்கலங்களை இஸ்ரோ ஏவியது உலக சாதனை.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.