head


சிங்கப்பூரை அதிர வைத்த படுகொலை!

|Wednesday, 21st July 2021|Crime| Page Views: 1

சிங்கப்பூரில் சக மாணவரைக் கொன்றதாக 16 வயது பள்ளி மாணவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. 13 வயது மாணவர் ஒருவரின் சடலம் கழிவறையில் இருப்பதாகக் கூறி ஒரு பள்ளியிலிருந்து நேற்று முன் தினம் திங்கட்கிழமை காவல்துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சம்பவ இடத்தில் ஒரு கோடாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கொலை செய்த மற்றும் கொலை செய்யப்பட்ட மாணவருக்கும் இடையே தொடர்பு இல்லை என்பது ஆரம்பநிலை விசாரணையில் தெரியவந்துள்ளது. சிங்கப்பூரில் பள்ளிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடப்பது அரிதானது. உலகிலேயே மிகக்குறைந்த குற்றங்கள் நடக்கும் நாடாக சிங்கப்பூர் உள்ளது. இந்த சம்பவத்தால் பிரபலமான அந்த தனியார் பள்ளி சில மணி நேரம் மூடப்பட்டது. வகுப்பறைகளிலிருந்த மாணவர்கள், ஒரு நபர் கோடாரியுடன் சென்றதைப் பார்த்ததாக குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்குத் தகவல் அனுப்பியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கு குறித்து நேற்று நீதிமன்ற விசாரணை நடந்தது. 16 வயது சிறுவன் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் பொதுவாக இதுபோன்ற கொலைக்குற்றச்சாட்டுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்படும். ஆனால், குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறார் 18 வயதுக்கும் குறைவாக இருப்பதால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மனநல பரிசோதனைக்கு அந்த சிறுவனை அனுமதிக்கும் வகையில் அவரை காவலில் வைக்க அனுமதிக்க வேண்டும் என நீதிபதியிடம் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டனர். இந்த சிறுவன் 2019ஆம் தற்கொலைக்கு முயன்றதால், ஏற்கெனவே ஒரு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

குற்றம்சாட்டப்பட்டவர் கொலைக்கு பயன்படுத்திய கோடாரியை ஆன்லைனில் வாங்கியது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட சிறுவனின் மறைவையொட்டி அவரது பெற்றோருடன் நாங்கள் அனைவரும் துக்கத்தை அனுசரிக்கிறோம். அவர்களுடைய துக்கத்தின் ஆழத்தை விளக்குவது உண்மையிலேயே மிகவும் கடினமானதுஹஹ என அவர் கூறியுள்ளார். சிங்கப்பூர் சட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்டவர் மற்றும் சந்தேக நபர் இருவரும் 18 வயதிற்குப்பட்டவர்கள் என்பதால் அவர்களின் பெயரை வெளியிட முடியாது. சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கும், நடந்த சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு துணையாக அரசு நிற்கும் என்று அவர் கூறியுள்ளார். நாட்டின் கல்வித்துறை அமைச்சர் சான் சுன் சிங், விசாரணையில் தனது அமைச்சகம் காவல்துறையுடன் இணைந்து பணியாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களுக்காக அவர் ஆற்றிய உரையில், "நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை, நாங்கள் உங்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருப்போம்." என்று கூறினார்.

இந்த சம்பவம் பள்ளி பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் மன நல ஆரோக்கியம் குறித்து சிங்கப்பூர் மக்கள் ஆன்லைனில் தீவிரமாக விவாதம் செய்ய தூண்டியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நபரால் கோடாரியை எவ்வாறு வாங்க முடிந்தது என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.