head


யுக்ரேன் போரால் உலக அளவில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம்: உலக வர்த்தக அமைப்பு எச்சரிக்கை!

- டாம் எஸ்பினெர்|Saturday, 18th June 2022|Political| Page Views: 1

யுக்ரேன் போரால் தொடங்கிய உணவு நெருக்கடி பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம் என, உலக வர்த்தக மையத்தின் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கோதுமை மற்றும் உரங்கள் பற்றாக்குறையால் ஆப்பிரிக்க நாடுகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என, உலக வர்த்தக அமைப்பு தலைமை இயக்குனர் எங்கோசி ஒகொன்ஜோ-இவேலா பிபிசியிடம் தெரிவித்தார்.

லட்சக்கணக்கிலான டன்கள் அளவுக்கு தானியங்கள் சேமிப்புக் கிடங்களில் கிடத்தப்பட்டுள்ளன. அவை போர் காரணமாக யுக்ரேன் துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தானியங்களின் விலை உயர்வது "உண்மையில் வேதனைக்குரியது" என அவர் தெரிவித்தார். கோதுமை விலை உயர்வு

உலகளவில் கோதுமையை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக யுக்ரேன் உள்ளது. உலக சந்தையில் யுக்ரேனின் கோதுமை ஏற்றுமதி 9 சதவீதமாக உள்ளது. மேலும் அந்நாட்டின் சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதி 42 சதவீதம் என்ற அளவிலும் சோளம் ஏற்றுமதி 16% என்ற அளவிலும் இருக்கிறது.

தானிய விலைகள் உலக அளவில் உயர்ந்துவரும் நிலையில், கருங்கடல் துறைமுகங்களில் ரஷ்ய தடையாலும், கடற்கரையில் ரஷ்ய, யுக்ரேனிய கண்ணிவெடிகளாலும் யுக்ரேனில் 20 முதல் 25 மில்லியன் டன் கோதுமையை வெளியே அனுப்பமுடியாத நிலை உருவாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கோதுமை விலை 59 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், சூரியகாந்தி எண்ணெய் விலை 30 சதவீதம், சோளத்தின் விலை 23 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் ஒகொன்ஜோ-இவேலா தெரிவித்தார்.

ஒடேசா மற்றும் மற்ற யுக்ரேனிய துறைமுகங்களிலிருந்து வெளியேறும் டேங்கர்களுக்காக, துருக்கிய கடற்படை துணையுடன் "தானிய வழித்தடத்தை' அமைப்பதற்கான முயற்சிகளை ஐ.நா மேற்கொண்டு வருகிறது. ஆனால், கருங்கடலில் உள்ள யுக்ரேனிய துறைமுகங்களில் உள்ள கண்ணிவெடிகளை அந்நாடு அகற்ற வேண்டும் என, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜெய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

"யுக்ரேனிய துறைமுகங்களிலிருந்து வெளியேறி துருக்கிக்கு செல்லும் கப்பல்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என, தினமும் கூறுகிறோம். துருக்கியின் ஒத்துழைப்புடன் இதனை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்," என, அவர் புதன்கிழமை தெரிவித்தார். இதனிடையே, கப்பல்களை அனுப்புவதற்கு முன்னர் "பயனுள்ள பாதுகாப்பு உத்தரவாதங்கள்" தங்களுக்கு தேவை என யுக்ரேன் தெரிவித்துள்ளது. கடலிலிருந்து ஒடேசாவைத் தாக்குவதற்கு அவ்வழித்தடத்தை ரஷ்யா பயன்படுத்தலாம் என யுக்ரேன் குரல் எழுப்பியுள்ளது.

பகுப்பாய்வு - தர்ஷினி டேவிட், உலக வர்த்தக செய்தியாளர் 400 மில்லியன் பேருக்கு உணவளிக்கும் வகையில் யுக்ரேன் தானியங்களை உற்பத்தி செய்கிறது. ஆனால், துறைமுகங்களுக்கான தடை காரணமாக அவற்றின் ஏற்றுமதியை வெகுவாக குறைத்திருப்பதாக ரஷ்யா மீது குற்றம்சாட்டப்படுகிறது. மத்திய கிழக்கில் உள்ள சில நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா இந்த பற்றாக்குறையை உணர்வதாக உள்ளன.

லிபியா, எரித்ரியா ஆகிய நாடுகள் 40% கோதுமையையும் லெபனான் 60% கோதுமையையும் யுக்ரேனிடமிருந்து பெறுகின்றன. ஆனால், இந்த பற்றாக்குறையின் வலி உலகம் முழுவதும் உணரக்கூடியதாக உள்ளது. ரஷ்ய படையெடுப்புக்குப் பின் கோதுமை விலை மூன்றில் ஒரு பங்கு உயர்ந்துள்ளது.

இதனை உடனடியாக சரிசெய்ய முடியாது. வழித்தடம் அமைப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் போதுமான கப்பல்கள் இருந்தாலும், அவை பாதுகாப்பாக வெளியேற கருங்கடலில் உள்ள கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும். இதுவொரு கடினமான வழிமுறையாகும்.

லட்சக்கணக்கிலான மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளதாக ஏற்கெனவே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. உலகத்தின் சில பகுதிகளில் சமூக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. வழித்தடத்தை அமைக்க முடியாவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கான முன்னோட்டமாக இது இருக்கிறது. பசி வேதனைகள் மற்றும் நீட்டிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டங்கள் நீண்டகால பொருளாதார, சமூக நெருக்கடியாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. யுக்ரேனிலிருந்து ரயில்கள் மற்றும் டிரக்குகள் மூலமாக வெறும் 20 லட்சம் டன் தானியங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, ஒகொன்ஜோ-இவேலா தெரிவித்துள்ளார். இந்த பிரச்னைக்கு "விடை தேடுவது மிகவும் முக்கியமானது" என அவர் தெரிவித்தார்.

ஐநா பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக நடவடிக்கைக் குழு ஒன்றை அமைத்துள்ளதாக கூறினார். "இதுதொடர்பாக ஏற்பாடுகள் ஏதும் செய்யப்பட முடியுமா என்பது குறித்து ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற நீண்ட நேரத்தை அவர் செலவிட்டார்," என அவர் கூறினார்.

இது தொடர்பாக ஒப்பந்தம் ஏதும் உருவாகாவிட்டால், "உலக அளவில் பயங்கரமான சூழலாக இது மாறும்," என அவர் தெரிவித்தார். கருங்கடல் பிராந்தியத்திலிருந்து ஆப்பிரிக்காவில் உள்ள 35 நாடுகள் உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்வதாகவும் 22 நாடுகள் உரங்களை இறக்குமதி செய்வதாகவும் அவர் கூறினார்.

"இது என்ன மாதிரியான பெரிய தாக்கங்களை, குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்தில் ஏற்படுத்தும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம்" என அவர் தெரிவித்தார். "அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நாம் மோசமான உணவு நெருக்கடிக்குள் செல்ல மாட்டோம் என நான் நம்புகிறேன்" என அவர் கூறினார். தற்போது அந்த பிராந்தியத்திலிருந்து தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட முடியாது என தெரிவித்த அவர், ஜூலை மாதத்தில் அறுவடை காலம் வருவதாக தெரிவித்தார். "இதனால் ஏற்கெனவே வீணான உணவுப்பொருட்களை ஒத்த அளவுக்கு தானியங்கள் வீணாகிவிடும், எனவே அடுத்த ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு இந்நிலைமை நீடிக்கலாம். இது உலகின் சில பகுதிகளுக்கு உண்மையில் பேரழிவை ஏற்படுத்தும்" என்றார் அவர்.

கொரோனா தொற்று, தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவையும் விநியோக சங்கிலி இடையூறுகளை மோசமாக்குகின்றன என்றார். மேலும் உணவுப்பொருட்களுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என அவர் உலக நாடுகளின் தலைவர்களை கேட்டுக்கொண்டார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.