head


இலங்கை பொருளாதாரம் :
அடுத்த 6 மாதங்களில் வரிசைகட்டி நிற்கும் பிரச்னைகள்|Sunday, 31st July 2022|Political| Page Views: 1

ஸ்திரமற்ற அரசியல் சூழல், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை, வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளில் இலங்கை திடமான முடிவை எடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. எனவே, இலங்கைக்கு எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானவை என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

இதேவேளை, சீனாவின் நன்மைகளற்ற திட்டங்கள் மற்றும் கடன் கொடுக்கல் வாங்கல்களே, இலங்கை பாதாளத்திற்கு வீழ்வதற்கு காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி தொடர்வதுடன், வட்டி வீதம் அதிகரிக்கின்றமையினால், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களை நடத்தி செல்வது சவாலாக காணப்படுகின்றது.

இயன்றவரை சர்வ பொருளாதார கொள்கை வரைவொன்று நடைமுறைப்படுத்தப்படும் வரை, இலங்கைக்கான புதிய நிதி வசதிகளை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்லை என உலக வங்கி ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையின் கீழ், வர்த்தக நடவடிக்கைகளை நடத்தி செல்வது சிரமமாகியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தொழில் வாய்ப்புக்களை இழப்பதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

புதிய நிதி வசதிகள் கிடையாது - உலக வங்கி கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதனூடாக இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதாக உலக வங்கி குறிப்பிடுகின்றது.

அதற்காக பொருளாதார உறுதிப்படுத்தல் தொடர்பில் அவதானம் செலுத்தி, அழமான கட்டமைப்பு திருத்தமொன்று அவசியமாகின்றது என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. மருந்து வகைகள், சமையல் எரிவாயு, உரம், பாடசாலை மாணவர்களுக்கான உணவு, வறுமை மற்றும் அபாய நிலைமையை எதிர்நோக்கியுள்ள குடும்பங்களுக்கான நிதி வழங்கல், அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்தலுக்காக தாம் தற்போதுள்ள கடன்களின் கீழ் வளங்களை மீள கட்டியெழுப்புவதாகவும் உலக வங்கி தெரிவிக்கின்றது.

இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இன்று வரை 160 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு அவசர தேவைக்காக வழங்கியுள்ளதாகவும் உலக வங்கி கூறுகின்றது.

மேலும், மருந்து, மருத்துவ உபகரணங்களை விநியோகித்தல், பாடசாலை உணவு மற்றும் மேலதிக வகுப்புக்களுக்கான கட்டணங்களை தவிர்த்தல் போன்ற நிதி சேவைகளுக்காக தொடர்ந்தும் உதவிகளை வழங்குவதாகவும் கூறப்படுகின்றது.

இந்த வளங்கள், வறுமை கோட்டின் கீழ் வாழும் மற்றும் மிகவும் அபாயகர நிலைமையிலுள்ளவர்களுக்கு செல்வதை உறுதிப்படுத்துவதற்கு, வலுவான அரசாங்கம் மற்றும் நம்பிக்கையான கண்காணிப்பை ஸ்தாபித்தலுக்கான நிறுவனங்களுடன் நெருங்கி நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உலக வங்கி குறிப்பிடுகின்றது.

'வரும் 6 மாதத்திற்குள் பாரிய பிரச்னை" ''நாம் இந்த பொருளாதார மறுசீரமைப்புக்களை செய்ய தவறும் பட்சத்தில், எதிர்வரும் 6 மாத காலத்திற்குள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்" என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கின்றார்;.

''பிரிஜ் நிதி கிடைக்கும் என நாம் எதிர்பார்த்தோம். சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியுமாயின், எமக்கு 3 அல்லது மூன்றரை பில்லியன் அமெரிக்க டொலர் (நட்பு நாடுகளிடமிருந்து) கிடைக்கும். அதாவது வருடமொன்றுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வீதம் கிடைக்கும். எனினும், அது கிடைக்கும் வரை எமது அத்தியாவசிய பொருட்களை எவ்வாறு இறக்குமதி செய்வது. அந்த இடத்திலேயே பிரச்சினை உள்ளது. நாம் எதிர்பார்த்த விதத்தில், எமது நட்பு நாடுகளிடமிருந்து பணம் கிடைக்கவில்லை"

''ஏற்றுமதியின் ஊடாக கிடைக்கும் டொலர் எமக்கு இருக்கின்றது. இறக்குமதிக்கு அந்த தொகையை மாத்திரமே செலவிட முடிகின்றது" என கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கின்றார்.

''நாம் கடன் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ள போதிலும், கடனை நாம் நிறுத்தவில்லை. நாம் உலக வங்கியிடமிருந்தும், ஆசிய அபிவிருத்தி வங்கியிருடமிருந்தும், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் பெற்றுக்கொள்ளும் கடனை நிறுத்த முடியாது. உணவு உட்கொள்ளாதிருந்தேனும், அந்த கடனை நாம் செலுத்த வேண்டும்" என அவர் சுட்டிக்காட்டினார்.

''அந்த கடனை செலுத்துவதற்கு, ஏற்றுமதியின் ஊடாக கிடைக்கும் மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்களுடன் கையெழுத்திட்டுள்ள கடன் உடன்படிக்கைகளில் ஆண்டுதோறும் கிடைக்கும் பணத்தை பயன்படுத்த வேண்டும்"

''சர்வதேசத்துடன் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பம் இது கிடையாது. இந்த சந்தர்ப்பத்தில் தான் சர்வதேசத்துடன நாம் இணக்கத்துடன் செயற்பட வேண்டும்" என ஹர்ஷ டி சில்வா கூறுகின்றார்.

நாடாளுமன்றத்திற்குள் வலுவாக இருந்தாலும், அரசாங்கத்திற்கு மக்கள் செல்வாக்கு குறைவு

இலங்கை அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்திற்குள் அதிகாரம் இருந்தாலும், அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு குறைவாகவே காணப்படுவதாக ஃபிரிஷ் ரேட்டிங்க்ஸ் நிறுவனம் தெரிவிக்கின்றது.

அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த நிறுவனம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. ராஜபக்ஷ குடும்பத்திற்கு நெருக்கமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல்வாதிகளில் பலர் நாடாளுமன்றத்திற்குள் இருக்கின்றமையினால், அது தொடர்ந்தும் மக்களின் எதிர்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமையலாம் என அந்த நிறுவனம் குறிப்பிடுகின்றது.

ஃபிரிஷ் ரேட்டிங்க்ஸ் நிறுவனமானது, அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமாகும்.

''புதிய ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுதிப்படுத்தப்பட்டதுடன், எதிர்கட்சி உறுப்பினர்களில் பலரும் அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். சர்வ பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஒரு பகுதியாக, கடினமான திருத்தங்களை மேற்கொள்வதற்கு போதுமான ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது என ஃபிரிஷ் ரேட்டிங்க்ஸ் நிறுவனம் தெரிவிக்கின்றது.

இலங்கை கடனை செலுத்துவதிலிருந்து தவிர்த்த நிலைமையிலிருந்து மீண்டெழுவதற்கான பிரதான காரணமானது, வலுவான அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பது என உலகிலுள்ள மூன்று சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்களில் ஒன்றான ஃபிரிஷ் ரேட்டிங்க்ஸ் நிறுவனம் குறிப்பிடுகின்றது.

கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ளுதல் ஆகிய விடயங்களுடன் தொடர்ந்தும் சவாலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரண பொதி கிடைக்குமாயின், அதற்கான உயரீய வரி அறவீடு, அரசாங்கத்தின் செலவீனங்களை கட்டுப்படுத்தல், ஒரு நெகிழ்வான மாற்று விகித நடைமுறையொன்று அமல்படுத்தல் வேண்டும் என ஃபிரிஷ் ரேட்டிங்க்ஸ் நிறுவனம் தெரிவிக்கின்றது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போதும், பொதுமக்களின் எதிர்ப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக கூறும் அந்த நிறுவனம், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை ஏற்படுத்த முடியாத நிலைமை ஏற்படுமாயின், இலங்கை வெளிநாட்டு நிதி நடவடிக்கைகளுக்கு பாரிய அபாயகர நிலைமை ஏற்படும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜுலை மாதம் நடுப்பகுதியாகும் போது, இலங்கைக்கு எரிபொருள், உணவு மற்றும் அத்தியாவசிய மருந்து வகைகளை இறக்குமதி செய்வதற்கு மாத்திரமன்றி, நாட்டின் வசம் காணப்பட்ட அந்நிய செலாவணி தொகையான 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் மாத்திரமே என அந்த நிறுவனம் கூறுகின்றது.

சீனாவிற்கு செலுத்த வேண்டிய கடன் காரணமாக, கடன் தொடர்பிலான பேச்சுவார்த்தை சிக்கலாக காணப்படும் என ஃபிரிஷ் ரேட்டிங்க்ஸ் நிறுவனம் சுட்டிக்காட்டுவதுடன், 2020ம் ஆண்டு இறுதிக் காலப் பகுதியில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் சீனாவிடமிருந்து பெற்ற கடனாக காணப்பட்டது.

இலங்கை சீனாவிடமிருந்து 13 வீத இரு தரப்பு கடன் மற்றும் சீன அபிவிருத்தி வங்கி மற்றும் சீன ஏற்றுமதி - இறக்குமதி வங்கி ஆகியவற்றிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் என சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளுக்கு அமைய தெரிய வருகின்றது.

கடன் செலுத்துவது தவிர்க்கப்படுவதற்கு பதிலாக, அதன் முதிர்ச்சி காலத்தை நீடித்தல், கடன் மீள் செலுத்தும் நடைமுறையை மீள தயாரித்தல், நிவாரண காலத்தை பெற்றுக்கொடுத்தல் போன்ற திட்டங்களை சீனா பின்பற்றுமாக இருந்தால், இந்த நடைமுறையானது ஏனைய கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தைகளுக்கு சவாலை ஏற்படுத்தும் என ஃபிரிஷ் ரேட்டிங்க்ஸ் நிறுவனம் தெரிவிக்கின்றது.

அமெரிக்காவின் விமர்சனத்திற்கு சீனா பதில் இலங்கைக்குள் தமது பாரிய உட்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் முதலீடுகள் இலங்கையை வளர்ச்சியடைய செய்வதற்கு காரணமாக அமைந்தது என்பதுடன், நாடு பாதாளத்திற்கு வீழ்வதற்கு காரணமாக அமையவில்லை என சீன வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

இலங்கை பொருளாதார ரீதியில் பாதாளத்திற்கு வீழ்வதற்கு பீஜிங்கின் பயனற்ற திட்டங்கள் மற்றும் கடன் கொடுக்கல் வாங்கல்கள் என அமெரிக்கா அண்மையில் குற்றஞ்சுமத்தியிருந்தது.

''விஞ்ஞான ரீதியிலான திட்டங்கள் மற்றும் முழுமையான சரிபார்த்தல் திட்டங்களின் ஊடாகவே சீன - இலங்கை ஒத்துழைப்புக்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்னெடுக்கப்பட்டதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜியன் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

சீன திட்டங்களானது, இலங்கையின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ததாகவும், அது இலங்கை மக்களுக்கு உறுதியான நன்மைகளை கொண்டு வந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்தியா, பல தீர்மானமிக்க நடவடிக்கைகளை எடுத்ததுடன், உண்மையில் வேகமான பதிலை வழங்கப்பட்டாலும், குறிப்பிட்டளவு உதவிகளை வழங்குமாறு சீனாவடம் கோரிய போதிலும், அதற்கு பதில் கிடைக்கவில்லை என சமந்தா பவர், புதுடில்லியில் வைத்து கூறியுள்ளார்.

இலங்கைக்கு பாரிய கடன்களை வழங்கும் நாடாக சீனா மாறியுள்ளது எனவும், ஏனைய கடன் வழங்குநர்களை விடவும் அதிக வட்டி விதத்தில் 'வெளிப்படையற்ற கடன் உடன்படிக்கைகளை வழங்குவதாகவும்" அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இலங்கைக்கு உதவி வழங்க சீனா கடன் திருத்தங்களை மேற்கொள்ளுமா என சிந்திக்க வேண்டும் என சமந்தா பவர் குறிப்பிடுகின்றார்.

சமந்தா பவரின் குற்றச்சாட்டுக்களை சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜியன் நிராகரித்துள்ளார்.

இலங்கைக்கு வெளிநாட்டு கடன் வழங்கும் போது, சர்வதேச மூலதன சந்தைகள் மற்றும் பல அபிவிருத்தி வங்கிகளில் இருந்து இலங்கை பெற்றுக்கொண்டுள்ள கடன்களில் சீனாவின் கடன் மிகவும் குறைவான பகுதியே காணப்படுகின்றது என அவர் கூறுகின்றார்.

அத்துடன், இலங்கைக்கு சீனா குறைந்த வட்டியிலேயே கடனை வழங்கியுள்ளதாகவும், நீண்ட கால கடன் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கும் பெறுமதியான பொறுப்புக்களை சீனா நிறைவேற்றியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

கடன் கொடுக்கல் வாங்கலாக சீனாவினால் 99 வருட குத்தகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தலை விமான நிலையம், தாமரை கோபுரம், ஹம்பாந்தோட்டை சர்வதேச மாநாட்டு மண்டபம், கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட திட்டங்கள் இலங்கைக்கு பயனற்றவை என சீனாவின் திட்டங்கள் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

பயனற்ற சீன திட்டங்களினால் இலங்கை கடன் சுமையில் சிக்குண்டுள்ளதாக பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், இந்த குற்றச்சாட்டுக்களை சீனா நிராகரித்து வருகின்றது.

இலங்கை பொது கடனை தாங்கிக் கொள்ள முடியாது என சர்வதேச நாணய நிதியம் கடந்த ஜுன் மாதம் 30ம் தேதி மதிப்பீடு செய்துள்ளது.

கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க இலங்கையின் கடனாளிகளிடமிருந்து போதுமான நிதி உத்தரவாதங்கள் தேவை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அந்த நிறுவனம் கூறுகின்றது.

எதிர்வரும் 2 வாரங்கள் தீர்மானமிக்கவை இலங்கையின் பொருளாhதார நிலைமை தொடர்பிலான எதிர்வரும் இரண்டு வாரங்கள் தீர்மானமிக்கவை என வடமேல் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா தெரிவிக்கின்றார்.

''பொருளாதார கோட்டுப்பாடுகளை பயன்படுத்தும் போது, 99 வீதம் அனுமானங்களினாலேயே கூறு முடிகின்றது. அந்த கோட்பாடுகளை அவ்வாறே பயன்படுத்த முடியாது. அவற்றை சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற வகையில், அவசர திட்டங்களுடனேயே பயன்படுத் வேண்டும். இவ்வாறான பணவீக்கம் ஏற்படும் போது, ஏதோ ஒரு வகையில் வர்த்தக சந்தை செயலிழக்கின்றமை, கேள்வி குறைகின்றமை போன்றவை காணமாக அமையலாம்" என அவர் கூறுகின்றார்.

எனினும், எமது பணவீக்கம் அது கிடையாது. தேக்க நிலைமையே காணப்படுகின்றது. இது பணவீக்கம் கிடையாது. பொருளாதாரம் மேல்நோக்கி செல்லாது. எமது பொருளாதாரம் எதிர்மறையாக செல்கின்றது. எதிர்மறையாக இருக்கின்ற போது, பணவீக்கம் என்பது தேக்க நிலையில் இருக்கின்றது என்றே அர்த்தப்படுகின்றது" என அவர் குறிப்பிகின்றார்.

ஏற்றுமதி வருமானத்தை கொண்டு வரும் நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தலின் முக்கியத்துவத்தையும் அவர் இதன்போது தெளிவூட்டினார்.

''இலங்கையின் முக்கிய ஏற்றுமதி வருமான வழியானது, ஆடைத் தொழில்துறையாகும். அந்த தொழில்துறை மூடப்படும் நிலைக்கு இலங்கை செல்லுமானால், தொழில் இழப்பு பிரச்சினைகள் ஏற்படக்கூடும்?பிரதான ஆடைத் தொழில் நிறுவனங்கள் ஆபிரிக்க நாடுகளை நோக்கி தற்போது செல்கின்றன.

இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டுமானால், நிலையான மத்திய வங்கி வேண்டும். சுதந்திரமாகவும் நடைமுறை ரீதியாகவும் சிந்திக்கக்கூடிய மத்திய வங்கி ஆளுநர் ஒருவர் தேவை".

''இதுவரை எரி;பொருளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. நாம் அறிந்த பிரச்சினைகளை எமக்கே கூறுவதற்கு எரிசக்தி அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் தேவையில்லை மக்களுக்கு பதில் தேவைப்படுகின்றது" என பேராசிரியர் கூறுகின்றார்.

இரண்டு வாரங்களில் புதிய அரசாங்கமொன்று நியமிக்கப்படும் என அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். எதிர்கட்சி இல்லாத நாடாளுமன்றமொன்று தற்போது கட்டாயம் இருக்க வேண்டும். எதிர்கட்சி இருக்கின்ற நாடாளுமன்றம் இருக்குமாயின், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்ள முடியாது"

பணவீக்கம் அதி உச்சத்தில் உள்ளது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில், 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 58.9 வீத பணவீக்கம் காணப்பட்டது.

2022ம் ஆண்டு மே மாதம் 45.3 வீதத்தில் காணப்பட்ட பணவீக்கம், ஜூன் மாதம் 58.9 வீதத்தை அடைந்துள்ளது.

இந்த பணவீக்க அதிகரிப்பானது, உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலைகளில் மாதாந்த அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது என கூறப்படுகின்றது.

இதன்படி, உணவு வகையில் வருடாந்த பணவீக்கமானது, 2022ம் ஆண்டு மே மாதத்தில் 58.0 சதவீதத்திலிருந்து ஜூன் மாதம் 75.8 வீதத்திற்கு உயர்வடைந்துள்ளது.

உணவு அல்லாத பொருள் வகைகளின் வருடாந்த பணவீக்கமானது, 2022 மே மாதம் 34.2 வீதத்திலிருந்து ஜூன் மாதம் 43.6 வீதத்திற்கு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது,

2022ம் ஆண்டு ஜுன் மாதம் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில், மாதந்தோறும் ஏற்பட்ட மாற்றமானது, 10.19 வீதமாகவும், உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலைகளில் முறையே 7.25 மற்றும் 3.66 வீதங்களாக அதிகரித்துள்ளன.

இதனடிப்படையில், அரிசி, மரக்கறி, மீன் வகைகள், சீனி, பால் மா மற்றும் கருவாடு உள்ளிட்ட உணவு வகைகளில் விலைகள் அதிகரித்துள்ளன.

மேலும், உணவு அல்லாத போக்குவரத்து (பெட்ரோல், டீசல், பஸ் கட்டணம்) தளபாடம், வீட்டு உபகரணங்கள், உணவகங்கள் ஆகியவற்றின் விலைகளும் 2022 ஜூன் மாதம் அதிகரித்துள்ளன
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.