head


இலங்கையோடு கைகோர்க்கும் இந்தியா !

|2023-01-21 10:12:13|Political| Page Views: 123

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (20) முற்பகல் அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களுக்கு முன்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கொழும்பு, பேஜெட் வீதியில் உள்ள அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் மற்றும் முதலீட்டு விவகாரங்கள் குறித்து அங்கு நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.

இலங்கையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இந்திய அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது.

முன்னாள் இந்தியப் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அவர்களின் ஆட்சி தொடங்கிய 1991ஆம் ஆண்டு இலங்கை இன்று எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்திக்க நேர்ந்தது என்பதை இந்திய வெளியுறவு அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

எனவே இலங்கை இன்று எதிர்நோக்கும் நிலைமையை இந்தியா நன்கு புரிந்து கொண்டுள்ளது என தெரிவித்த ஜெய்சங்கர், இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க இந்திய அரசாங்கம் அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றார்.

பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன் இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் செயற்படுத்தப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் நிகழ்நிலை(online) தொழில்நுட்பத்தின் ஊடாக திறந்து வைக்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட உயர் மட்ட சமூக அபிவிருத்தித் திட்டத்தின் (HICDP High Impact Community Development Project ) வரம்புகளை உயர்த்துவது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் இங்கு கைச்சாத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் இலங்கை தரப்பில் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவும், இந்திய தரப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் கையெழுத்திட்டனர்.

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இலங்கையில் பல சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு வழிகாட்டும் இந்த ஒப்பந்தம் மே 2005 இல் கையெழுத்தானது. அதன் தனிப்பட்ட திட்ட வரம்பு 300 மில்லியன் இலங்கை ரூபாவாக இருந்தது, இது இன்று கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் மூலம் 600 மில்லியன் இலங்கை ரூபாயாக இரட்டிப்பாகியுள்ளது.

இதேவேளை, 2017ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது இந்திய அரசாங்கமும் மக்களும் இலங்கைக்கு வழங்கிய பரிசாக மலையக நடனக்கலைக்கான கலைக்கூடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு அருகாமையில் கட்டப்பட்டுள்ள கல்விக்கூடத்தையும் நிகழ்நிலை தொழில்நுட்பத்தின் மூலம் திறந்து வைத்தார்.

இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட 300 வீடுகளை (காலி, கண்டி, நுவரெலியா - தலா 100 வீடுகள்) கையளிக்கும் நிகழ்வும் இந்திய வெளிவிவகார அமைச்சரினால் இணையத்தள தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது.

60,000 வீடுகள் கொண்ட இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய 50,000 வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. வட்டுக்கரை மக்களுக்காக 4,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றதுடன், இதன் கீழ் கட்டப்பட்ட 3,300க்கும் மேற்பட்ட வீடுகள் ஏற்கனவே பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்பட்ட "மாதிரி கிராம வீடமைப்புத் திட்டத்தின்" கீழ் அனுராதபுரம் மற்றும் பதுளை மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளும் பயனாளிகளிடம் கையளிக்கப்பட அடையாளப்படுத்தப்பட்டது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் செயலணியின் தலைவருமான சாகல ரத்நாயக்க, அதிபரின் செயலாளர் சமன் ஏகநாயக்க, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் உட்பட அரச அதிகாரிகள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.