head


பல ஆண்டுகளாக தொடரும் இஸ்ரேல் பலஸ்தீன மோதல் !

|2023-02-16 11:51:58|General| Page Views: 148

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. நீண்ட காலமாக இருதரப்பிற்கும் இடையே நடந்த இந்த மோதலில் பாலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டும், பலர் படுகாயமடைந்துமுள்ளனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர், - பாலஸ்தீனர்கள் இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் மோதல் காரணமாக நூறாண்டுகளாக துயரமும் ஆக்கிரமிப்பும் தொடர்கிறது. நூற்றாண்டுகால மோதலாக பாலஸ்தீனம், மத்திய கிழக்கின் அந்தப் பகுதியை ஆண்டுவந்த ஓட்டோமான் அரசாட்சியை முதலாம் உலகப் போரில் வீழ்த்திய பின், அந்தப் பகுதி பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அந்தப் பகுதியில் யூத சிறுபான்மையினரும், அரபு பெரும்பான்மையினரும் குடிபுகுந்தனர்.

பாலஸ்தீனத்தில் உள்ள யூதர்களுக்கு, 'தேசியப் பகுதி' ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற பொறுப்பை உலக நாடுகள் பிரிட்டனுக்கு வழங்கின. இதில்தான் பதற்றம் தொடங்கியது. யூதர்களைப் பொறுத்தவரை அது அவர்களது பூர்வீகம். ஆனால் பாலஸ்தீனிய அரபு மக்களும் அந்தப் பகுதிக்கு சொந்தம் கொண்டாடினர்.

ஐரோப்பாவில் துன்புறுத்தலில் இருந்து தப்பி, இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியில் நடந்த ஹாலோகாஸ்ட் படுகொலைகளில் இருந்து தப்பி, தாயகம் வேண்டி 1920_- 40 கால கட்டத்தில் அங்கு யூதர்களின் வருகை அதிகரித்தது.

யூத அரபு மக்களுக்கு இடையேயும், பிரிட்டனுக்கு எதிராகவும் வன்முறைகள் வெடித்தன. 1947ஆம் ஆண்டு பாலஸ்தீனம் யூதர் மற்றும் அரபு பகுதி என இரண்டாக மாற ஐ.நா வாக்களித்தது. ஜெருசலேம் சர்வதேச நகரமானது.

இந்த திட்டம் யூதத் தலைவர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் அரபு தரப்பில் இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

1948ஆம் ஆண்டு இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட இயலாத பிரிட்டன் ஆட்சியாளர்கள் அந்த பகுதியைவிட்டு வெளியேறினர். யூத தலைவர்கள் இஸ்ரேல் உருவானதாக அறிவித்தனர்.

அதை பாலஸ்தீனத்தில் பல்வேறு மக்கள் எதிர்த்தனர். அண்டை நாடுகளை சேர்ந்த படைகள் படையெடுத்து வந்தன. ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் அந்த பகுதியை விட்டு தப்பித்து சென்றனர்.

பலர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அல் நக்பமா அல்லது பேரழிவு என்று அவர்களால் இது அழைக்கப்படுகிறது. போர் நின்ற ஒரு வருடத்திற்கு பிறகு அந்த பகுதியை பெரும்பான்மையாக இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

கடந்த 50 ஆண்டுகளில் இந்த பகுதிகளில் இஸ்ரேல் குடியிருப்புகளை நிறுவியது. தற்போது அங்கு 6 இலட்சத்துக்கும் அதிகமான யூதர்கள் வசிக்கின்றனர். இது சர்வதேச சட்டங்களின்படி தவறு என்றும் அமைதிக்கு தடையாக உள்ளது என்றும் பாலஸ்தீனம் கூறுகிறது.

இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே நடக்கும் மோதல் மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்திருக்கிறது. இஸ்ரேலியப் படையினரின் நடவடிக்கைகள் பாலஸ்தீனர்கள் பலரின் உயிர்களையும் பலிவாங்கி விட்டன.

இந்த சமீபத்திய பதற்ற நிலை, ஜெருசலேத்தின் எதிர்காலம் குறித்த கேள்வியைச் சுற்றி எழுந்துள்ளது. இந்த நகரை இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் ஆகிய இரு தரப்பினருமே உரிமை கொண்டாடுகிறார்கள்.ஆனால் இது நீண்டகாலமாக நிலவிவரும் ஒரு சிக்கலான மோதலின் மிகச்சமீபத்திய ஒரு அத்தியாயம்தான். இதற்கு தீர்வு என்பது வெகு தொலைவில் இருப்பது போலத்தான் தோன்றுகிறது.

பாலங்தீன விடுதலை அமைப்பும், இஸ்ரேலும், 1993 இல் ஒஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி, பாலஸ்தீன அமைப்பு 'வன்முறையையும், பயங்கரவாதத்தையும்' கைவிட்டது. மேலும் அது இஸ்ரேல் 'அமைதியுடனும் பாதுகாப்புடனும்' வாழ அதற்கிருக்கும் உரிமையையும் அங்கீகரித்தது.

இஸ்ரேல் மேற்குக்கரையிலிருந்தும், காசாவிலிருந்தும் அதன் யூதக் குடியேற்றங்களை படிப்படியாக விலக்கிக் கொள்ள ஒப்புக் கொண்டது. இதன் மூலம் பாலஸ்தீனர்கள் ஒரு சுதந்திரமான நாடாக உருவாக அனுமதிக்க இந்த முடிவுக்கு அது ஒப்புக்கொண்டது. ஆனால் இதை இஸ்ரேல் ஒருபோதும் அமுல்படுத்தவில்லை.

மீண்டும் தொடங்கிய கடும் சண்டையால் முடிவிலாத் துயரில் பாலஸ்தீன மக்கள் அல்லல்படுகின்றனர். ஆனாலும் பாலஸ்தீன மண்ணில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இஸ்ரேல் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

சர்வதேச நாடுகளாலும் நிறுத்த முடியாத இஸ்ரேல் பலஸ்தீன யுத்தத்தின் முடிவு தான் என்ன ? அந்நாடுகளின் எதிர்காலம் தான் என்ன ?அங்குள்ள மக்களின் சிறுவர்களின் எதிர்காலம் தான் என்ன ? ஆயுத போராட்டம் தொடர்ந்து இடம்பெறும் நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு மீண்டெழும்.. முடிவில்லா துயரம் ..!



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.