தங்களுக்குள் ஒரு கூட்டுக்குள் வராத தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழராகிய எங்களின் உரிமைகளை எவ்வாறு வென்றெடுப்பார்கள் ??
|2023-03-10 22:33:17|General|
Page Views: 1228
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் என்பது இன்றைய காலகட்டத்தில் பரபரப்பாக பேசப்படும் ஒன்று. தமிழர் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் எமது அரசியல் தலைவர்களும் தேர்தலை நடத்த வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றனர்.
ஆனால், தேர்தல் மீதான அவர்களின் அக்கறையை ஏன் எமது தமிழ் மக்களின் பிரச்சினைகளில் காட்டுவதில்லை? இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தவிர எமது மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். அவற்றுள் சிலவற்றைச் சுட்டிக்காட்ட முயல்கிறேன்.
தமிழீழ மீனவர்களின் பிரச்சினை!
எமது வடகிழக்கு மீனவர்களுக்கும் மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை யாவரும் அறிந்ததே. இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் எமது மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழர் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எமது அரசியல்வாதிகள் எவரும் இந்தப் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்கவோ தீர்வைக் கொண்டுவரவோ இதுவரை முன்வரவில்லை.
வடக்கு கிழக்கில் வாழும் எமது தமிழ் மக்களின் பிரதான வாழ்வாதாரமாக மீன்பிடித் தொழில் உள்ளது. இந்தப் பின்னணியில் எமது கடற்பரப்பில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி அளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளினால் எமது மீன்வளம் அழியும் அபாயகரமான நிலை ஏற்படும்.
மேலும், இழுவைப் படகுகளின் பாவனையால் எமது மீனவர்களின் வாழ்வாதாரம் நேரடியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
இவ்வாறான பாரிய பிரச்சனைகள் இருக்கும் போது இதைப் பற்றி பேசாமல் தேர்தலை நடத்துமாறு சிங்கள அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் எமது தமிழ் அரசியல்வாதிகளின் நோக்கம் என்ன?
எமது தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவும், போர்க்குற்றம் தொடர்பில் விசாரணை நடத்தவும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் எமது தமிழ் அரசியல்வாதிகள், தமிழீழ மீனவர்களின் பிரச்சினை குறித்து இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்வைப் பெறலாமே? ஏன் அதனை செய்யவில்லை?
இதற்கு முக்கியக் காரணம், எமது மக்களுக்காக குரல் கொடுப்பது போல் நடித்து, இந்திய அரசிடமிருந்து கிடைக்கும் சலுகைகளுக்காக, நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை இந்தியப் மீனவர்களுக்கு விட்டுக்கொடுக்கிறார்கள்.
இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் எங்களின் வாழ்வாதாரத்தை பறிக்க முயல்கின்றன. அது எமது தமிழ் அரசியல்வாதிகளின் ஊடாகவே நடைபெறுகின்றது என்பதை தமிழ் மக்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கழிவுகள் முகாமைத்துவம்!
அடுத்த விடயம் தமிழர் தாயகம் என்று பெருமையுடன் கூறிக்கொள்ளும் எமது வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கழிவுகள் முகாமைத்துவ விடயத்தில் முறையான நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதில்லை. பொது இடங்கள், பாதைகள் என் பல்வேறு இடங்களிலும் குப்பைகளை கொட்டுவதால் எங்கள் தாயகம் குப்பை கூழமாக மாறியுள்ளது.இவ்வாறு சுற்றுச்சூழல் மாசுபடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு சில சமயங்களில் ஆபத்தான நோய்களும் பரவ வாய்ப்புள்ளது. வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் தாயகம் என்று பேசும் எமது தமிழ் அரசியல்வாதிகள், இந்த ஆபத்தான நிலை குறித்து மக்களுக்கு வழிகாட்டினார்களா? அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே அவர்கள் உழைக்கிறார்கள் என்பதை நம் மக்கள் புரிந்து கொள்ள இது உதவும் என்று நான் நினைக்கிறேன்.
மீறப்படும் போக்குவரத்து விதிமுறைகள்!
தமிழர் தாயகம் என்று பெருமையுடன் கூறிக்கொள்ளும் எமது வடக்கு கிழக்கு பிரதேசங்களில் போக்குவரத்து என்று வரும்போது, மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டிகள், முச்சக்கரவண்டிகள், பேருந்துகள் போன்றவற்றை பயன்படுத்தும் சாரதிகள் எவரும் சட்டத்திட்டங்களை பின்பற்றுவதாக தெரியவில்லை.இதனால், சாலை விபத்துகளும், உயிரிழப்புக்களும் அதிகரித்துள்ளன. இவற்றையெல்லாம் இங்குள்ள நமது தமிழ் அரசியல் தலைவர்கள் எந்த இடத்திலும் எடுத்துரைப்பதும் இல்லை. கண்டுக்கொள்வதும் இல்லை. இவ்வளவு அற்ப விஷயத்தைக் கூட புரிந்து கொள்ள முடியாதவர்களை ஆட்சியில் அமர்த்தினால் நம் தாயகத்தின் கதி என்ன?
போதைப்பொருள் பாவனை!
நமது தமிழர் தாயகத்தை தற்போது ஆட்டிப்படைக்கும் ஒரு விடயம் போதைப்பொருள் பாவனை.இளைஞர்களும் பாடசாலை மாணவர்களும் போதைக்கு அடிமையாகி தன் எதிர்காலத்தை இழந்து வருகின்றனர். இவற்றுக்கு எதிராக இவர்கள் யாரும் வாய் திறப்பதே இல்லை. குறைந்தது போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியிருக்கலாம். அவற்றிலிருந்து அவர்களை வெளிக்கொணர எவருமே முயற்சி எடுக்கவில்லை.
ஏனெனில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஒரு சில தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் பங்குண்டு என்பதனாலேயே அவர்கள் அவற்றைப் பற்றி எல்லாம் மறந்தும் கூட பேசுவதில்லை. இவர்கள் எதிர்பார்ப்பது வாக்குகளை மட்டுமே.. இவர்களின் சுயலாப அரசியலுக்காக தமிழ் மக்களாகிய எம்மை பகடைக்காய்களாக பயன்படுத்தி வருகின்றனர்.அன்றாடம் மக்கள் எதிர்நோக்கும் சவால்களைத் தீர்க்க எந்த முயற்சியும் எடுக்காமல் நாங்கள் உரிமைகளை வென்றெடுத்தோம் என தற்பெருமை பேசி வருகிறார்கள்.சர்வதேசத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.. இதெல்லாம் தமிழ் தலைவர்களின் அரசியல் நாடகம்.இதனை மக்கள் நன்குணர வேண்டும்.
இனியும் இவர்களை நம்பி ஏமாற வேண்டாம். எமது இப்பிரச்சினைகளுக்காக உரிமைகளுக்காக நாம் நிச்சயம் போராட வேண்டும்.இப்பதிவை எழுதும் நானும் அத்தகைய நிலைப்பாட்டிலேயே இருக்கின்றேன்.ஆனால் அதற்கான தருணம் இதுவல்ல.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.