Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
அரசியல்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை விடுவிப்பது தொடர்பில் சட்டத்தரணிகள் குழு சவூதி பயணம்

06 Oct 2026, 10:25 AM
பார்வைகள்: 342
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை விடுவிப்பது தொடர்பில் சட்டத்தரணிகள் குழு சவூதி பயணம்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜனின் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் அவரை விடுவிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, விசேட சட்டத்தரணிகள் குழுவொன்று இன்று சவூதி அரேபியாவிற்கு செல்லவுள்ளது.

இந்தக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா, சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக மன்றாடியார் நாயகம் அசாத் நவாவி, ஜனாதிபதி சட்டத்தரணி ஹலீல் பாரிஸ் மற்றும் சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சவூதி அரேபியாவிற்கு செல்லும் சட்டத்தரணிகள் குழு, அந்நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அனோஜனை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளுடன் அவரது வழக்கு தொடர்பில் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளது.

இதேவேளை, அனோஜன் தொடர்பில் சவூதி அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பைசர் முஸ்தபா மற்றும் உபுல் குமாரப்பெரும ஆகியோரை நியமித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த நியமனத்தை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியிருந்தார்.

இதற்கமைய, பைசர் முஸ்தபா மற்றும் உபுல் குமாரப்பெரும ஆகியோர் அண்மையில் மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, அனோஜனின் விடயத்தில் மனிதாபிமான அடிப்படையிலான தலையீட்டை மேற்கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக மொஹமட் நஷீட் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.