Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
விளையாட்டு

தமிழக மாநில அளவிலான நீச்சல் போட்டியில் ஈழச் சகோதரிகள் சாதனை!

15 Oct 2026, 10:25 AM
பார்வைகள்: 764
தமிழக மாநில அளவிலான நீச்சல் போட்டியில் ஈழச் சகோதரிகள் சாதனை!

தமிழ்நாட்டில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரி மற்றும் பாடசாலைகளுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் அபார திறமையை வெளிப்படுத்திய ஈழத் தமிழ்ச் சகோதரிகளான தனுஜா மற்றும் டிலாஜினி ஆகியோர் சாம்பியன் பட்டத்தையும் பல பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில், கல்லூரி மாணவிகளுக்கான பிரிவில் பங்கேற்ற தனுஜா, சிறப்பாகச் செயல்பட்டு சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியதுடன் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.

பதக்கங்களைக் குவித்த டிலாஜினி

இதேவேளை, பாடசாலை மாணவிகளுக்கான பிரிவில் பங்கேற்ற டிலாஜினி, மூன்று போட்டிகளில் முதலிடத்தைப் பெற்று மூன்று தங்கப் பதக்கங்களையும், மேலும் இரண்டு போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்று இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.

இதன் மூலம் மாநில அளவிலான போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி, ஐந்து பதக்கங்களைக் கைப்பற்றி அவர் சாதனை படைத்துள்ளார்.

தொடரும் வெற்றிப் பயணம்

தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஜெயக்குமார் – அருள்ஜோதி தம்பதியரின் புதல்விகளே தனுஜா மற்றும் டிலாஜினி ஆவர்.

இவர்கள் நீண்டகாலமாக இந்திய அளவில் நடைபெறும் பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று, தமது திறமைகளை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மாநில அளவிலான போட்டியில் இருவரும் பெற்றுள்ள இந்தச் சாதனை, அவர்களது விளையாட்டுப் பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.