Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

ஹோர்முஸ் நீரிணை கட்டுப்பாடுகளிலிருந்து இந்தியக் கப்பல்களுக்கு விலக்கு – ஈரான் அறிவிப்பு!

09 Nov 2026, 11:54 AM
பார்வைகள்: 20
ஹோர்முஸ் நீரிணை கட்டுப்பாடுகளிலிருந்து இந்தியக் கப்பல்களுக்கு விலக்கு – ஈரான் அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் பயணிப்பதற்கு ஈரான் விதித்துள்ள கட்டுப்பாடுகளிலிருந்து இந்தியக் கப்பல்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் சேர்த்து சீனா, ஈராக் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கும் இந்த விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் தேசிய நலன்களைக் கருத்திற்கொண்டே இந்த விலக்குகள் வழங்கப்பட்டுள்ளதாக, ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் அமீர் ஹயாத்-மொகத்தம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதை இலகுபடுத்தும் நோக்கில் இந்த விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, சீனாவின் அரசியல் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அந்நாட்டுக் கப்பல்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் ஈரானிய மாணவர் செய்தி முகமையிடம் (ISNA) தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு முகங்கொடுத்து வரும் ஈரானுக்கு, இந்தியா மனிதாபிமான அடிப்படையில் மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த உதவிகள் ஈரானைச் சென்றடைவதற்கான ஏற்பாடுகளையும் இந்தியா மேற்கொண்டு வருகின்றது.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகின் முக்கியமான கடல்வழிப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்குப் பதிலடியாக, ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கக் கடற்படை முற்றுகையிட்டது.

பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணை, குறித்த மோதலுக்கு முன்னர் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கைக் கையாளும் முக்கியமான கடல்வழிப் பாதையாக விளங்கியது.

இந்தியா தனது கச்சா எண்ணெய்த் தேவையில் சுமார் 90 சதவீதத்தை இறக்குமதி செய்கின்றது. இதில் சுமார் 30 சதவீதமானவை ஹோர்முஸ் நீரிணை ஊடாகவே நாட்டை வந்தடைகின்றன.

அத்துடன், இந்தியாவின் திரவப் பெற்றோலிய வாயு (LPG) இறக்குமதியிலும் பெரும்பகுதி இந்த நீரிணை வழியாகவே இடம்பெறுவதால், இந்தியாவின் எரிசக்தி விநியோகத்தில் இந்தக் கடல்வழிப் பாதை மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.