ரஷ்யப்படையில் வடக்கின் தமிழ் இளைஞர்கள் வலிந்து இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விரைவில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா(Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.
வடக்கின் தமிழ் இளைஞர்கள் மற்றும், ஏனைய இலங்கையர்கள் போரில் ஈடுபடுத்தப்படுகின்றமை குறித்து ரஷ்ய வெளிவிவார அமைச்சருடன், அமைச்சர் விஜித ஹேரத் விரைவில் உத்தியோகபூர்வமான பேச்சுக்களை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திராவுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நேற்றைய தினம் (06.01.2024) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த முகவர்கள் தொடர்பில் குற்றவியல் விசாரணையொன்றை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் பிரதியமைச்சர் கூறியுள்ளார்.
கொழும்பில் உள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு முன்னாலுள்ள சுற்றுவட்டத்தில் ரஷ்யப்படையில் தமது உறவுகள் வலிந்து இணைக்கப்பட்டு போரில் ஈடுபடுத்தப்படுவதாகத் தெரிவித்து நான்கு தாய்மார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் சிவில் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் இணைந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கும், பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரவுக்கும் இடையிலான சந்திப்பு வெளிவிவகார அமைச்சின் பிரதி அமைச்சர் அலுவலகத்தில் நேற்று நண்பகலளவில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.