Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

மாஞ்சோலை மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம் – ஒப்பந்த காலம் முடியுமுன் வெளியேற எதிர்ப்பு

31 Jul 2026, 02:52 PM
பார்வைகள்: 100
மாஞ்சோலை மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம் – ஒப்பந்த காலம் முடியுமுன் வெளியேற எதிர்ப்பு

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையை வனத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள இந்த வனப்பகுதி, 1929 ஆம் ஆண்டு சிங்கம்பட்டி ஜமீனிடமிருந்து பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (BBTC) நிறுவனத்திற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு தேயிலைத் தோட்டங்கள் அமைக்கப்பட்டு, 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல தலைமுறைகளாக தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.

நிறுவனத்தின் குத்தகைக் காலம் 2028 ஆம் ஆண்டில் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கு முன்னரே தேயிலைத் தோட்டம் மூடப்பட்டதுடன், அந்த நிலங்கள் அனைத்தும் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற அறிவுறுத்தலின் அடிப்படையில் அடர்ந்த வனப்பகுதிகளில் பொதுமக்கள் குடியிருப்பதற்கு அனுமதி இல்லை என்பதால், மாஞ்சோலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 534 குடும்பங்களில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர சம்மதம் தெரிவித்துள்ளன. அவர்களுக்கு மாற்றுத் தொழில் வாய்ப்புகள், அரசு காணி ஒதுக்கீடு, புதிய வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், குத்தகைக் காலம் இன்னும் நிறைவடையாத நிலையில் தங்களை வெளியேற்றுவது நியாயமற்றது எனக் கூறி, பல குடும்பங்கள் தங்களது சொந்த வீடுகளை விட்டு வெளியேற மறுத்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.