Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க பாகிஸ்தான் தீவிர முயற்சி

31 Jul 2026, 03:00 PM
பார்வைகள்: 137
அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க பாகிஸ்தான் தீவிர முயற்சி

அமெரிக்கா மற்றும் ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புவதற்காக தங்களால் இயன்ற அனைத்து ராஜதந்திர முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் கையெழுத்தான இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாஹிர் ஆண்ட்ராபி, வாராந்திர ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

உலகின் முக்கிய கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிப்பதே இந்த முயற்சிகளின் முக்கிய நோக்கமாக இருப்பதாகவும் அவர் கூறினார். 

பதற்றத்தை குறைப்பதற்கான சிறந்த வழி பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர அணுகுமுறையே என வலியுறுத்திய அவர், போர் நிறுத்தம் நீடிப்பதற்கும் அமெரிக்கா–ஈரான் உரையாடல் மீண்டும் ஆரம்பிப்பதற்குமான அனைத்து முயற்சிகளையும் பாகிஸ்தான் ஆதரிப்பதாக தெரிவித்தார்.

மேலும், ஜூன் 22ஆம் தேதி வெளியிடப்பட்ட பாகிஸ்தான்–கத்தார் கூட்டறிக்கையும், இஸ்லாமாபாத் ஒப்பந்தமும் அடிப்படையாகக் கொண்டு, இரு நாடுகளுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை குறைத்து பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை பாகிஸ்தான் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேற்கு ஆசியாவின் பாதுகாப்பு நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்த ஆண்ட்ராபி, அண்மையில் காணப்பட்ட அமைதியான சூழல் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தாலும், தற்போதைய நிலைமை மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவும் ஈரானும் அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, இஸ்லாமாபாத் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொழில்நுட்ப மட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டு பின்னர் இஸ்லாமாபாத் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த நிலையில், சமீபத்திய பதற்றமான சூழல் அந்த ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்த புதிய கேள்விகளை எழுப்பியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.