Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

சியுட்டா எல்லையில் உறவினர்களைத் தேடி தவிக்கும் மொரோக்கோ குடும்பங்கள்

03 Aug 2026, 11:00 AM
பார்வைகள்: 139
சியுட்டா எல்லையில் உறவினர்களைத் தேடி தவிக்கும் மொரோக்கோ குடும்பங்கள்

ஸ்பெயின் கட்டுப்பாட்டிலுள்ள சியுட்டா (Ceuta) பகுதிக்குள் எல்லை கடந்து நீந்திச் செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான மொரோக்கோ மக்களில் பலரின் நிலை குறித்து தகவல் கிடைக்காததால், அவர்களது குடும்பத்தினர் மொரோக்கோவின் ஃபினிடெக் நகரில் கவலையுடன் காத்திருக்கின்றனர்.

எல்லைப் பகுதியிலுள்ள வேலிக்கருகே திரண்டிருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், சியுட்டாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்களிடம் தங்களது அன்புக்குரியோரின் புகைப்படங்களைக் காட்டி, அவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்ட முயன்றனர்.

கடந்த சில நாட்களில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சியுட்டாவை அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் ஃபினிடெக் பகுதிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களை குடும்பத்தினரிடம் அழைத்துச் செல்ல பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த சம்பவத்தில் 72 பேர் உயிரிழந்துள்ளதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130-ஐ நெருங்கக்கூடும் என்றும், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் மொரோக்கோ மனித உரிமைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஃபினிடெக்கிலிருந்து சுமார் 135 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முலே புஸ்செல்ஹாம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான விவசாயி அப்தெல்லாதீஃப், சியுட்டாவுக்குச் செல்ல நீந்த முயன்ற தனது 17 வயது தம்பியின் நிலை குறித்து கவலையுடன் காத்திருக்கிறார்.

கடந்த வியாழக்கிழமை பயணத்தைத் தொடங்கிய அவரது தம்பிக்கு கடலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் தங்களிடமிருந்து பிரிந்துவிட்டதாகவும் உடன் சென்ற இரு நண்பர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ள நிலையில், தனது தம்பி உயிருடன் இருக்கிறாரா என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை கிடைக்காததால் குடும்பத்தினர் வேதனையில் உள்ளனர்.