Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

அமெரிக்காவில் 40,000 பவுண்ட் பீர் திருட்டு! திருடப்பட்ட பீரை கண்டுபிடிக்க சமூக வலைதளங்களில் உதவி கோரும் நிறுவனம்

03 Sep 2026, 11:43 AM
பார்வைகள்: 335
அமெரிக்காவில் 40,000 பவுண்ட் பீர் திருட்டு! திருடப்பட்ட பீரை கண்டுபிடிக்க சமூக வலைதளங்களில் உதவி கோரும் நிறுவனம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள விநியோக மையமொன்றில் இருந்து சுமார் 40,000 பவுண்ட் (18,144 கிலோ) எடையுள்ள ‘ப்ளூ ரிப்பன்’ பீர் கேன்கள் திருடப்பட்டுள்ள நிலையில், அவற்றைக் கண்டுபிடிக்க சமூக வலைதளப் பயனர்களின் உதவியை பாப்ஸ்ட் ப்ரூயிங் நிறுவனம் நாடியுள்ளது.

மான்ட்க்ளேர் பகுதியில் அமைந்துள்ள அன்ஹீசர்-புஷ் விநியோக மையத்தில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார் 25,000 அமெரிக்க டொலர் மதிப்பிலான ப்ளூ ரிப்பன் பீர்கள் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சான் டியாகோவுக்கு கொண்டு செல்லப்படவிருந்த குறித்த பீர்கள், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி குற்றவாளிகளால் எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பாப்ஸ்ட் ப்ரூயிங் நிறுவனம், திருடப்பட்ட பீர்களைக் கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

இதே விநியோக மையத்தில் ஒரே நாளில் இடம்பெற்ற இரண்டாவது திருட்டுச் சம்பவம் இதுவென மான்ட்க்ளேர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதலாவது சம்பவத்தில், சுமார் 45,000 அமெரிக்க டொலர் மதிப்பிலான மதுபானங்கள் ஆகஸ்ட் 17ஆம் திகதி திருடப்பட்டுள்ளன. அரிசோனா மாநிலத்தின் டக்சன் நகருக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய இந்த மதுபானங்கள், இரண்டு வாரங்கள் கடந்தும் இலக்கை சென்றடையவில்லை.

இதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பாப்ஸ்ட் ப்ளூ ரிப்பன் பீர் கேன்களும் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சம்பவங்களுக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருப்பதை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, போக்குவரத்து நிறுவனம், சாரதி மற்றும் வாகனங்கள் தொடர்பாக வழங்கப்பட்ட தகவல்களில் முரண்பாடுகள் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த இரு திருட்டுச் சம்பவங்களும் ஒரே திட்டமிட்ட மோசடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக இடம்பெற்றனவா என்பது தொடர்பில் தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.