Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்-தடைத்தாண்டல் பரீட்சைக்கு சலுகை

12 Sep 2026, 11:00 AM
பார்வைகள்: 201
ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்-தடைத்தாண்டல் பரீட்சைக்கு சலுகை

இலங்கை ஆசிரியர் சேவையின் வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைகளைப் பூர்த்தி செய்வது தொடர்பில் கல்வி அமைச்சு முன்வைத்த சலுகைக் கோரிக்கைக்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.

இதன்படி, 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் 2025ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஆசிரியர் சேவையின் தரம் I-க்கு தரமுயர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு, வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சையைப் பூர்த்தி செய்வதிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த பரீட்சையை அடுத்த தரமுயர்வைப் பெறுவதற்கு முன்னர் பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒருவர் தரமுயர்வு பெறுவதற்கு முன்னர் பூர்த்தி செய்ய வேண்டிய வினைத்திறன் தடைத்தாண்டலை, அடுத்த தரமுயர்வுத் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் தரமுயர்வு பெற்ற அதிகாரிகளுக்கும், முந்தைய தரத்திற்கான வினைத்திறன் தடைத்தாண்டலைப் பூர்த்தி செய்வதிலிருந்து விலக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2025 ஜூன் 30ஆம் திகதிக்குப் பின்னர், தத்தமது தரங்களுக்கு உரிய வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தரமுயர்வு பெறும் அதிகாரிகளுக்கும், தொகுதிகள் (Modules) அல்லது வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைகளைப் பூர்த்தி செய்துள்ளார்களா என்பதைப் பொருட்படுத்தாது தரமுயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதலாவது வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சை இலக்கம் 2494 மற்றும் 2026 ஜூன் 19ஆம் திகதியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமையவும், இரண்டாவது பரீட்சை இலக்கம் 2498 மற்றும் 2026 ஜூலை 17ஆம் திகதியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமையவும், மூன்றாவது பரீட்சை இலக்கம் 2503 மற்றும் 2026 ஆகஸ்ட் 21ஆம் திகதியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமையவும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் தெளிவுபடுத்தும் வகையில் கல்வி அமைச்சின் சுற்றறிக்கையொன்று எதிர்காலத்தில் வெளியிடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலக்கம் 2444/21 மற்றும் 2025 ஜூலை 8ஆம் திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்புக்கு அமைய, வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சை முறையை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.