Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

அமெரிக்க இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி முன்னிலை – ட்ரம்பின் குடியரசுக் கட்சி பின்னடைவு!

04 Nov 2026, 11:24 AM
பார்வைகள்: 68
அமெரிக்க இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி முன்னிலை – ட்ரம்பின் குடியரசுக் கட்சி பின்னடைவு!

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைகளுக்கான இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி முன்னிலை வகித்து வருகின்ற நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. தேர்தல் களத்தில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிக்கிடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.

இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், செனட் சபையில் ஜனநாயகக் கட்சி 45 இடங்களையும், குடியரசுக் கட்சி 34 இடங்களையும் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோன்று, பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி 64 இடங்களையும், குடியரசுக் கட்சி 29 இடங்களையும் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலைமையிலான குடியரசுக் கட்சி தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

அமெரிக்க அரசியல் அமைப்பில் இடைத்தேர்தல் என்பது ஜனாதிபதியின் பதவிக்காலத்தின் இடைப்பகுதியில் நடத்தப்படும் முக்கியமான அரசியல் சோதனையாகக் கருதப்படுகிறது. இத்தேர்தல் முடிவுகள், ஜனாதிபதியின் அரசியல் செல்வாக்கு மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரச் சமநிலையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்நிலையில், ஜனநாயகக் கட்சியின் தற்போதைய முன்னிலை அமெரிக்க அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை இரு கட்சிகளுக்கிடையிலான போட்டி உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.