Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

கமேனி இறுதிச்சடங்கு

06 Jul 2026, 11:15 AM
பார்வைகள்: 78
கமேனி இறுதிச்சடங்கு

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் அரசு மரியாதை இறுதிச்சடங்கு தெஹ்ரானில் தொடங்கியுள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த திரண்டுள்ளனர். இதனால் ஏற்படக்கூடிய கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு சவால்களை முன்னிட்டு, ஈரான் அதிகாரிகள் விரிவான அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.காமேனி, 2026 பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதலில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அவருடன் அவரது குடும்ப உறுப்பினர்களில் சிலரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், மத்திய கிழக்கில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக அவரது இறுதிச்சடங்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜூலை 4ஆம் தேதி தெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லா வளாகத்தில் காமேனியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.அதனைத் தொடர்ந்து நடைபெறும் இறுதி ஊர்வலம் ஈரானின் புனித நகரமான கோம் வழியாகச் சென்று, பின்னர் ஈராக்கின் நஜாஃப் மற்றும் கர்பலா நகரங்களை அடையும். இறுதியாக மஷ்ஹத் நகரில் வியாழக்கிழமை நடைபெறும் நிகழ்வுடன் இறுதிச்சடங்கு நிறைவடைந்து, அங்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல நாட்கள் நீடிக்கும் இந்த இறுதி ஊர்வலங்களில் மிகப்பெரிய மக்கள் திரள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்ட நெரிசல் மற்றும் கடும் கோடை வெப்பம் காரணமாக அவசரநிலைகள் உருவாகும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.ஜெர்மனியின் டை வெல்ட் (Die Welt) நாளிதழ் வெளியிட்ட தகவலின்படி, அவசரத் திட்டத்தின் ஒரு பகுதியாக தெஹ்ரானில் ஆயிரக்கணக்கான புதிய கல்லறைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சாத்தியமான உயிரிழப்புகள் மற்றும் காணாமல் போகும் நபர்களை கையாள்வதற்காக தனிப்பிரிவும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச்சடங்கில் பங்கேற்கும் மக்களின் வசதிக்காக ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதுடன், பள்ளிகள் மற்றும் மசூதிகள் தற்காலிக தங்குமிடங்களாக மாற்றப்பட்டுள்ளன. காமேனியின் உடல் வைக்கப்பட்டுள்ள மேடையைச் சுற்றி கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் 20 நிமிடங்களுக்கு மேல் அங்கு நிற்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.கடும் வெப்பத்தால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க குளிர்விப்பு வசதிகள், தண்ணீர் தெளிப்பான்கள் மற்றும் மருத்துவ உதவிக்காக ராணுவ ஹெலிகாப்டர் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, 2020ஆம் ஆண்டு ஈரான் புரட்சிகர காவல்படை தளபதி காசெம் சுலைமானியின் இறுதிச்சடங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 56 பேர் உயிரிழந்ததுடன், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேபோல், 1989ஆம் ஆண்டு அயதுல்லா ரூஹோல்லா கொமேனியின் இறுதிச்சடங்கிலும் கூட்ட நெரிசல் காரணமாக பலர் உயிரிழந்தனர். அந்த அனுபவங்களை கருத்தில் கொண்டு, இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு மற்றும் அவசரநிலை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.