Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

ஓமன் வளைகுடாவில் சரக்கு கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல்.

07 Jul 2026, 11:46 AM
பார்வைகள்: 112
ஓமன் வளைகுடாவில் சரக்கு கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல்.

ஓமன் வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பயணித்த இரண்டு வர்த்தகக் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளன.அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு வர்த்தகக் கப்பல்கள் மீது ஏவுகணைகள் தாக்கியதில், இரு கப்பல்களும் சேதமடைந்தன. எனினும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்குப் பின்னர், ஓமன் கடற்கரைக்கு அருகே சென்ற ஒரு எரிவாயு கப்பலில் தீப்பிடித்ததாகவும், அது இதே சம்பவத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் பிரிட்டன் கடல்சார் வர்த்தக கண்காணிப்பு அமைப்பு (UKMTO) தெரிவித்துள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பாதுகாப்பு சூழல் தொடர்ந்து பதற்றமாக இருந்து வருகிறது. அண்மையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், ஹோர்முஸ் நீரிணையை மையமாகக் கொண்டு மீண்டும் பதற்றம் அதிகரித்து வருகிறது.

உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இந்தத் தாக்குதல், சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் உலகளாவிய எரிசக்தி சந்தையில் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.