Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

இந்தோனேஷியா சென்ற பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு; போர் விமானங்கள் பாதுகாப்பு அணிவகுப்பு

07 Jul 2026, 12:00 PM
பார்வைகள்: 87
இந்தோனேஷியா சென்ற பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு; போர் விமானங்கள் பாதுகாப்பு அணிவகுப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வ பயணமாக இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா சென்றடைந்தார். அவரது சிறப்பு விமானம் இந்தோனேஷிய வான்வெளிக்குள் நுழைந்தபோது, அந்நாட்டு விமானப்படையின் போர் விமானங்கள் பாதுகாப்பு அணிவகுப்பாக புடைசூழ்ந்து மரியாதை செலுத்தின.ஜகார்த்தா விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு இந்தோனேஷிய அரசின் சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அரசு முறை வரவேற்பு நிகழ்வில், இரு நாடுகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டதுடன், இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.பின்னர், இந்தோனேஷியாவில் வாழும் இந்திய வம்சாவளியினரையும் பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, இந்திய சமூகத்தினர் உற்சாக கோஷங்களை எழுப்பி, கைதட்டி அவருக்கு வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள்-மக்கள் உறவு மேலும் வலுப்பெற்று வருவதாக தெரிவித்தார்.

இந்தப் பயணத்தின் போது, இந்தியா–இந்தோனேஷியா இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, தொழில்நுட்பம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையை விரிவுபடுத்தும் வகையில் பல முக்கிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது