ஆட்சி மாற்றத்திலாவது எமது தாயக மீனவர்களின் தலையெழுத்து மாறுமா ????

user 02-Dec-2024 கட்டுரைகள் 337 Views

 

இதுவரை காலமும் தேர்தலில் மும்முரமாகயிருந்த எமது தமிழ் அரசியல் தலைமைகள்  தாயகத்தின் பின்னணியில் நடக்கும்  பிரச்சினைகள் பற்றிக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.இவர்கள் தேர்தலில் மூழ்கியிருந்த காலகட்டத்தில் எமது கடற்றொழிலாளர் பிரச்சினைகள் சற்று அதிகமாகவே இருந்தது  எனலாம் . வாக்கு  சேர்க்கும் வேட்கையில் எமது கடற்றொழிலாளர் பற்றி இவர்கள் கண்டு கொள்ளவில்லை.எமது

மீனவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்பை எளிதில் கணித்து விட முடியாது .இன்று நெருக்கடிக்கு வித்திட்டுள்ள இலங்கை இந்திய மீனவர்  பிரச்சனைக்கு இதுவரை உரியத் தீர்வுக்காணப்படவில்லை. எமது கடல் வளத்தை சரியாக பயன்படுத்தியிருந்தால் நாட்டை பொருளாதார செலவிலிருந்து மீட்பதற்கான டொலர் வருமானத்தை பெற்றிருக்க முடியும். பொக்கிஷம் வாய்ந்த கடல் வளத்தை இந்திய மீனவர்களுக்கு தாரை வார்த்துவிட்டு நாம் வெளிநாடுகளில் இருந்து மீனை இறக்குமதி செய்து வருகிறோம் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியது யார்?

 

 இந்த வருடம் மாத்திரம் ஜனவரி தொடக்கம் ஆகஸ்ட் வரை 39 பில்லியன் மெற்றிக் தொன் மீனை இலங்கை இறக்குமதி செய்துள்ளது. அதற்காக 24 பில்லியனுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக  கடற்றொழில் அமைச்சும் தெரிவித்திருந்தது. வருடாந்தம் 900 பில்லியன் பெறுமதியான இலங்கை மீன்வளத்தை இந்திய மீனவர்கள் சூறையாடுகின்றார்கள் .தாயக கடற்றொழிலாளர் அமைப்பு இதனை பல தடவை சுட்டிக்காட்டியும் எமது தமிழ் அரசியல் தலைமைகள் எவரும் அதனை கண்டு கொள்ளவில்லை. ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளவில்லை. அவர்களை பொறுத்தவரை தேர்தல் மட்டுமே இலக்காக இருந்தது.

 

கடற்றொழில் மூலம் ஜீவனோபாயத்தை நடத்தும் எமது தாயக மீனவர்கள் பொருளாதார ரீதியாக பாரிய சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அன்றாடம் தனது வாழ்வை கொண்டு நடத்துவதே அவர்களுக்கு மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.இதற்கு காலம் காலமாக வந்த தமிழ் அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் உறுதிமொழி வழங்கினார்களே ஒழிய இதுவரையில்  தீர்வு வழங்கப்படவே இல்லை .

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மீன்களை மாத்திரம் அல்ல எமது மீனவர்களின் வாழ்வாதாரமான வலைகளையும் அறுத்து செல்கின்றனர்.அத்துடன் அவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் மூலம் மீன்களின் இனப்பெருக்கமும் பாதித்து எமது மீன்வளம் அழிவடையும் அபாயமும் நிலவுகின்றது.எமது தமிழ் அரசியல்வாதிகள் இதனை அறியாமல் இல்லை. இந்தியாவிற்கு விசுவாசம் காட்டும் எமது அரசியல் தலைமைகள்  அவர்களுக்கு வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பிய எமது தமிழ் மக்களுக்கு விசுவாசம்  காட்டாமல் இருப்பது ஏனோ ?

 

தாயக மீனவ சொந்தங்களுக்கு இதற்கான தீர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டும் இதுவரை ஊமைகளாய் இருந்த தமிழரசியல் தலைமைகள் இதற்காக கொஞ்சம்மாவது குரல் எழுப்ப வேண்டும் .போலி வாக்குறுதிகளை நிறுத்திவிட்டு இனியாவது  ஆத்மார்த்தமாகவும்   அக்கறையுடனும்  செயற்பட வேண்டும். இல்லையெனில் கடந்த தேர்தலில் அரசியல்வாதிகள் பலரை நிராகரித்த மக்கள் மீதமிருக்கும் உங்களையும் தூக்கி எறிந்து விடுவார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்.

Related Post

பிரபலமான செய்தி