மலையக அரசியல்வாதிகள் இருவர் தோட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான சொகுசு வீடுகளை (பங்களாக்கள்)தன் வசம் வைத்திருந்ததாகவும் அதனை அரசாங்கம் மீட்டெடுத்துள்ளதாகவும் ஊடகங்களில் நம்பத்தகுந்த செய்திகள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. அவர்களின் பெயரோடு புகைப்படங்களும் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனைக் கேட்கும் போது எமது மலையகத் தமிழ் மக்கள் பற்றி சற்று அதிகமாகவே சிந்திக்க தோன்றுகிறது. குறிப்பிட்ட பங்களாக்களை கையகப்படுத்தி வைத்திருந்தது தங்களுடைய பாவனைக்கு மாத்திரமே ஒழிய மலையக மக்களின் நன்மைக்காக ஒன்றுமல்ல.
இதற்கு முன்னர் நாம் வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பிய மலையக பிரதிநிதிகள் எவரும் எமது மலையகத் தமிழ் மக்களுக்கான சலுகைகளையும் உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க முன் நின்று உழைத்தவர்கள் என்று எவருமே இல்லை. இத்தனை வருட காலம் லயின் குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தாமல் சென்றவர்கள் மாறாக மலையக மக்களுக்கு இந்திய கலாசாரத்தை கொண்டு வந்து சேர்க்க முயற்சித்தனர். அதன் ஒரு விளைவே மலையகத்தில் இன்று அதிகரித்து வரும் கேபிள் தொலைக்காட்சி சேவை. இவை மக்களுக்கு நல்ல விடயங்களை மாத்திரமா கொண்டு சேர்க்கிறது? இதன் மூலம் மக்களின் நேரம் மழுங்கடிக்கப் படுகின்றது. காலம் வீணடிக்கப்படுகிறது. இது எமது இளைஞர் யுவதிகளை இலக்காகக் கொண்டே செயற்படுகின்றது. எதிர்கால இளைஞர் யுவதிகள் அதன்பால் ஈர்க்கப்பட்டு குறிப்பிட்ட கலாசாரத்திற்கு அடிமையாகின்றனர்.இறுதியில் தவறான வழிகளை சென்றடைகின்றனர். இக்கேபிள் தொலைக்காட்சி விடயங்களின் பின்னணியிலும் மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
ஏற்கனவே மலையகத்தில் காணப்படும் ஒரு சில மதுபான சாலைகள் மலையக அரசியல்வாதிகளின் பெயரிலேயே இயங்குவதாக குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த பங்களாக்களை கையகப்படுத்தி வைத்திருந்த அரசியல்வாதிகள் கூட அதனை பொதுமக்களின் பாவனைக்காகவோ அல்லது ஒரு பொது சேவைக்காகவோ வழங்கவில்லை. தங்களது சொகுசு வாழ்க்கைக்கே பயன்படுத்தி வந்துள்ளனர். இதுதான் எமது மலையக அரசியல்வாதிகளின் உண்மை முகம்.
இவ்வாறு கடந்த காலத்தில் மக்களுக்கு தேவையான எதையும் செய்யாதவர்கள். இனியும் செய்யப்போவதில்லை. வடகிழக்கிலுள்ள தமிழ் அரசியல்வாதிகளும் சரி எமது மலையகத் தமிழ் அரசியல்வாதிகளும் சரி மக்களுக்குத் தேவையானவற்றை செய்ய தவறியமையாலேயே கடந்தத் தேர்தலில் மக்கள் அவர்களை தூக்கி எறிந்துவிட்டார்கள். இவர்களின் இக்கபட அரசியல் தொடரும் எனில் இவர்கள் அரசியலில் இருந்து முற்றிலும் இல்லாமல் போகும் நிலை வரும்.