Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

எல்நினோ தாக்கத்தால் இலங்கையில் வறட்சி மற்றும் வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

16 Jul 2026, 02:36 PM
பார்வைகள்: 195
எல்நினோ தாக்கத்தால் இலங்கையில் வறட்சி மற்றும் வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

எதிர்வரும் எல்நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் இலங்கையில் வறட்சி மற்றும் வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நீர் பயன்பாட்டை மிகவும் சிக்கனமாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவு பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்ததாவது, நாட்டின் 80 முக்கிய நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் சேமிப்பு தற்போது சுமார் 48 சதவீதமாக குறைந்துள்ளது. தற்போதைய யால பயிர்ச்செய்கை பருவத்திற்குத் தேவையான நீர் போதுமானதாக இருந்தாலும், வறட்சி நீடித்தால் எதிர்வரும் பெரும்போகப் பயிர்ச்செய்கை பாதிக்கப்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை எதிர்கொள்ள முன்னுரிமை அடிப்படையில் நீர் விநியோகிக்கும் விசேட நீர் முகாமைத்துவத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வறண்ட பகுதிகளில் பாரம்பரிய எல்லங்கா குளக் கட்டமைப்புகளை புனரமைத்தல், வடமத்திய மாகாண கால்வாய் திட்டங்களை முன்னெடுத்தல் மற்றும் நீர் வீணாவதைத் தடுக்கும் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதேவேளை, களனி, களு, ஜின், நில்வளா மற்றும் மல்வத்து ஆறு உள்ளிட்ட முக்கிய ஆற்றுப்படுகைகளின் நீர்மட்டம் தற்போது சாதாரண நிலையில் காணப்படுவதாகவும், உடனடி வெள்ள அபாயம் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், வறட்சி நீடித்தால் ஆறுகளின் நீர்மட்டம் வேகமாகக் குறையக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் குறைந்தளவு நீர் தேவைப்படும் மாற்றுப் பயிர்ச்செய்கைகளைத் திட்டமிடுமாறும், பொதுமக்கள் நீரை பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. பல மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் வெப்பநிலை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.