Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

 மலையகப் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் எதிர்காலம் என்ன?

10 Nov 2026, 10:03 AM
பார்வைகள்: 18
 மலையகப் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் எதிர்காலம் என்ன?

இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் சூழலில், அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகள் தொடர்பான விவகாரங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

குறிப்பாக, தெரிவுசெய்யப்பட்ட 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைக் கலைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மலையக மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் அவர்களுக்கெனத் தனியான ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.

இவ்வாறான சூழலில், மலையகத் தமிழ் மக்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட 'மலையகப் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை'யின் எதிர்காலம் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

33 அரச நிறுவனங்களைக் கலைக்கும் நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் செயற்றிறனற்றதாகவும், பொருளாதாரச் சுமையாகவும் காணப்படும் தெரிவுசெய்யப்பட்ட 33 அரச நிறுவனங்களைக் கலைப்பதற்கான நடவடிக்கைகளை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு முன்னெடுத்து வருகிறது.

அமைச்சரவையின் அனுமதியுடன் கடந்த மார்ச் மாதம் அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்ட விசேட பிரிவொன்று இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இதற்கிடையில், 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக, அரச நிறுவனங்களின் ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) மற்றும் பணிக்கொடை (Gratuity) ஆகியவற்றுக்கான நீண்டகால நிலுவைக் கொடுப்பனவுகளைத் தீர்ப்பதற்கும் திறைசேரி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக ஒதுக்கப்பட்ட 5 பில்லியன் ரூபாயில், 2.8 பில்லியன் ரூபாய் 2026 ஓகஸ்ட் மாத இறுதிக்குள் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

அரச நிறுவனங்களின் இலாபம் அதிகரிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களால் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு, விநியோகச் சங்கிலித் தடங்கல்கள் மற்றும் முன்பதிவுகள் இரத்துச் செய்யப்படுதல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை அரச நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ளன.

எனினும், 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 227.8 பில்லியன் ரூபாயாகப் பதிவான 51 பிரதான அரச நிறுவனங்களின் மொத்த இலாபம், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 259.3 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதன்படி, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 31.5 பில்லியன் ரூபாய் இலாப அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இவ்வாறு சில அரச நிறுவனங்கள் இலாபமீட்டி வருகின்ற நிலையில், சமூக நலனை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் மலையகப் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

கலைக்கப்படவுள்ள 33 அரச நிறுவனங்களின் பெயர்ப்பட்டியல் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாத நிலையில், மலையக மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த அதிகாரசபையும் குறித்த மறுசீரமைப்பு நடவடிக்கைக்குள் உள்ளடக்கப்படுமா என்ற அச்சம் மலையக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மலையக மக்களுக்குத் தனியான ஆணைக்குழு வேண்டும்: இராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

இதேவேளை, மலையக மக்களின் கல்வி, வாழ்வாதாரம், குடியுரிமை மற்றும் வறுமை உள்ளிட்ட நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், அவர்களுக்கெனத் தனியான ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து மலையக மக்கள் படிப்படியாகப் பல்வேறு உரிமைகளைப் பெற்றிருந்தாலும், ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் இன்றும் பாரிய சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்தகால அரசாங்கங்கள் மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் போதிய அக்கறை செலுத்தவில்லை என விமர்சித்த அவர், தற்போதைய அரசாங்கமாவது இந்த விடயத்தில் உரிய கவனம் செலுத்தி, தனியான ஆணைக்குழுவை அமைக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏனைய சமூகங்களுக்கு இணையாகச் சம உரிமையுடனும் கௌரவத்துடனும் மலையக மக்கள் வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதே இக்கோரிக்கையின் பிரதான நோக்கமாகும்.

மலையகப் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் எதிர்காலம் என்ன?

மலையக மக்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்காகத் தனியான நிறுவனம் ஒன்று அவசியம் என்ற அடிப்படையில், 2018ஆம் ஆண்டின் 32ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் மலையகப் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை உருவாக்கப்பட்டது.

இந்த அதிகாரசபை 2019 பெப்ரவரி மாதம் முதல் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது.

எனினும், தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இந்த அதிகாரசபையின் எதிர்காலம் குறித்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.

பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட மீளாய்வுக் குழு, 2024 டிசம்பர் முதல் 2025 பெப்ரவரி வரையான காலப்பகுதியில் 124 அரச நிறுவனங்களை ஆய்வு செய்து பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.

இதன்போது, மலையகப் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையைத் தனியான அதிகாரசபையாகத் தொடரச் செய்யாமல், சம்பந்தப்பட்ட அமைச்சின் கீழுள்ள ஒரு பிரிவாக மாற்ற வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டதாக ஆங்கிலப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால், அதிகாரசபையை அமைச்சின் கீழுள்ள ஒரு பிரிவாக மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என்றும், அதன் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே மீளாய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும், 2025 டிசம்பர் மாத நாடாளுமன்ற முன்னேற்ற அறிக்கையிலும் இந்த அதிகாரசபை தனியான அதிகாரசபையாகவே குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேவேளை, 2025ஆம் ஆண்டில் 42.5 மில்லியன் ரூபாயும், 2026ஆம் ஆண்டில் 85 மில்லியன் ரூபாயும் இந்த அதிகாரசபைக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ஒதுக்கப்பட்ட நிதி உண்மையில் எந்தளவுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது, அதனூடாக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்பது தொடர்பில் வெளிப்படைத்தன்மை அவசியமாகியுள்ளது.

ஒருபுறம் ஆணைக்குழு கோரிக்கை; மறுபுறம் அதிகாரசபையின் எதிர்காலம் குறித்த கேள்வி

மலையக மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணத் தனியான ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் அதேவேளை, அம்மக்களின் முன்னேற்றத்துக்காகச் சட்டரீதியாக உருவாக்கப்பட்டுள்ள தனியான அதிகாரசபையை அமைச்சின் கீழுள்ள சிறிய பிரிவாக மாற்றுவது அல்லது அதன் செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான பரிந்துரைகள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

இரண்டு நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் விவாதிக்கப்படுவது முரண்பாடான நிலையைத் தோற்றுவித்துள்ளது.

எனவே, மலையக மக்களின் உரிமைகள் மற்றும் அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அதிகாரசபையின் எதிர்காலம் குறித்து அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

மலையக மக்களின் கல்வி, காணி, வீடமைப்பு, வாழ்வாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியமும் இச்சூழலில் வலியுறுத்தப்படுகிறது.