Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

கந்தளாயில் 22,000 ஏக்கரில் நெல் அறுவடை ஆரம்பம்; விவசாயிகள் உற்சாகம்

26 Jul 2026, 10:29 AM
பார்வைகள்: 274
கந்தளாயில் 22,000 ஏக்கரில் நெல் அறுவடை ஆரம்பம்; விவசாயிகள் உற்சாகம்

திருகோணமலை மாவட்டத்தின் பிரதான நீர்ப்பாசன மூலாதாரமான கந்தளாய் குளத்தின் நீரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சிறுபோக நெற்செய்கையின் அறுவடைப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.

சுமார் 22,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களின் அறுவடை தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, விவசாயிகள் நவீன அறுவடை இயந்திரங்களின் உதவியுடன் அறுவடைப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கந்தளாய் குளத்தின் கீழ் நீர்ப்பாசனம் பெறும் பரட்டைக்காடு, செட்டிக்காடு, வான் எல, வட்டுகச்சி, நாலாம் வாய்க்கால் மற்றும் தம்பலகாமம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை நடவடிக்கைகள் வேகமடைந்துள்ளன.

இந்த முறை சிறுபோகச் செய்கையில் எதிர்பார்த்ததை விட அதிக விளைச்சல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் நிர்ணயித்திருப்பது தங்களுக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

சந்தை விலையை விட தங்களது உழைப்புக்கு ஏற்ற வகையில் உத்தரவாத விலை வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நல்ல விளைச்சலும் உறுதியான விலையும் காரணமாக, கந்தளாய் குளத்தை நம்பி விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.