Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை நினைவேந்தல் வடக்கு, கிழக்கில் அனுஷ்டிப்பு

27 Jul 2026, 08:43 AM
பார்வைகள்: 194
வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை நினைவேந்தல் வடக்கு, கிழக்கில் அனுஷ்டிப்பு

1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனவன்முறைகளின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர்கள், போராளிகளை நினைவுகூரும் நிகழ்வுகள் நேற்று வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டன.

திருகோணமலை பிரதான கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் நினைவேந்தல் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், முதலில் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டதுடன், உயிர்நீத்தோரின் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி ஆகியோரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை வன்முறைகளின் போது உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதிகள் நினைவுகூரப்பட்டனர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை 43 ஆம் ஆண்டு  தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம்  தமிழீழ விடுதலை இயக்கம்  ரெலோ கட்சியின் ஏற்பாட்டில் மன்னாரில் உள்ள  கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.  

கட்சியின் மாவட்ட பொறுப்பாளரும், மன்னார் நகர முதல்வருமான டானியல் வசந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதன்போது  குட்டிமணி, தங்கத்துரை  உள்ளடங்களாக  53 அரசியல் கைதிகளுக்கும்,பொது மக்களுக்குமான  நினைவேந்தல் இடம்பெற்றது.

இதன்போது குட்டிமணி, தங்கத்துரை ஆகிய  இருவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் படுகொலை செய்யப்பட்ட  தமிழ் அரசியல் கைதிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

புகைப்பட தொகுப்பு (Gallery)