Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

தையிட்டி திஸ்ஸ விகாரை – பவானி வீதி விவகாரம்

12 Aug 2026, 12:19 PM
பார்வைகள்: 179
தையிட்டி திஸ்ஸ விகாரை – பவானி வீதி விவகாரம்

தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறப்படும் பவானி வீதி தொடர்பில் தென்னிலங்கையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பொப்பிலியான சுனேத்ரா தேவி பிரிவெனாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தேசிய உரிமைகளை பாதுகாக்கும் மத்திய நிலையத்தின் தலைவர் கலகம குசலதம்ம தேரர், இந்த விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

பவானி வீதி தொடர்பான வழக்கு

பவானி வீதியை விடுவிப்பது தொடர்பாக வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு எதிராக பலாலி பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திஸ்ஸ விகாரையின் ஊடாக வீதியொன்றை அமைப்பதற்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக குசலதம்ம தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பலாலி பொலிஸாரால் பெறப்பட்டிருந்த தடை உத்தரவை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் இரத்து செய்துள்ளதாகவும், இதனையடுத்து இடைநிறுத்தப்பட்டிருந்த வீதி அமைக்கும் பணிகளை மீண்டும் முன்னெடுக்க பிரதேச சபை தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விகாராதிபதியின் முன்னைய அறிக்கை

இதேவேளை, சுமார் மூன்று நாட்களுக்கு முன்னர் தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி தேரர் வெளியிட்ட அறிக்கையில், அங்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை எனவும், வீதி அமைக்கப்படாது எனவும், எவரும் பதற்றமடையத் தேவையில்லை எனவும் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

எனினும், விகாராதிபதியின் இந்தக் கருத்தைக் காட்டிலும் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளரின் கூற்றே தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளதாக குசலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இதுவரையான நடவடிக்கைகள், முன்வைக்கப்பட்ட சட்டமூலங்கள் மற்றும் பௌத்தத்திற்கு எதிரானதாக தாம் கருதும் செயற்பாடுகள் ஆகியவற்றை கருத்திற்கொள்ளும்போது, தற்போதைய நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ள நோக்கம் குறித்து தங்களுக்கு நியாயமான சந்தேகமும் அச்சமும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தையிட்டி திஸ்ஸ விகாரை மற்றும் பவானி வீதி தொடர்பான இந்த விவகாரம், வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படும் நிலையில் தொடர்ந்து கவனம் பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.