Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

வடக்கில் விவசாயத்திற்காக விடுவிக்கப்பட்ட காணிகளில் வீடுகள் அமைக்க அனுமதி

28 Aug 2026, 11:41 AM
பார்வைகள்: 104
வடக்கில் விவசாயத்திற்காக விடுவிக்கப்பட்ட காணிகளில் வீடுகள் அமைக்க அனுமதி

யாழ்ப்பாணம்: வலி. வடக்கு மீள்குடியேற்றப் பகுதிகளில் இராணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகளுக்காக மட்டும் விடுவிக்கப்பட்ட பொதுமக்களின் தனியார் காணிகளில், தற்போது வீடுகளை அமைக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வலி. வடக்கு மீள்குடியேற்றப் பகுதிகளில் பொதுமக்களின் காணிகள் முன்னதாக விடுவிக்கப்பட்டிருந்த போதிலும், அவற்றில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள மட்டுமே இராணுவத்தினரால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உத்தரவுக்கு அமைய, விவசாய நடவடிக்கைகளுக்காக மட்டும் விடுவிக்கப்பட்ட தனியார் காணிகளில், வீடுகள் தேவையுள்ளவர்கள் வீடுகளை அமைத்துக்கொள்ள தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், அரசாங்கத்தின் வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடு தேவைப்படுவோர் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி பிரதேச செயலகங்கள் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என்றும், தகுதியுடையவர்களுக்கு வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.