Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

வடக்கு, கிழக்கில் 21.3 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் மிதிவெடி அகற்றும் பணிகள் தொடர்கின்றன!

02 Sep 2026, 09:55 AM
பார்வைகள்: 66
வடக்கு, கிழக்கில் 21.3 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் மிதிவெடி அகற்றும் பணிகள் தொடர்கின்றன!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மிதிவெடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மேலும் 21.3 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் மிதிவெடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதிவெடிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான அடிப்படையில் மிதிவெடிகளை அகற்றும் வேலைத்திட்டம், 2002ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டது.

இதன் கீழ், உள்நாட்டு மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து இலங்கை இராணுவத்தின் மிதிவெடி அகற்றும் அலகும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

2026 ஜனவரி 01ஆம் திகதி நிலவரப்படி, மேலும் 21.3 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் மிதிவெடிகளை அகற்ற வேண்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான மிதிவெடி அகற்றும் அலகுடன் இணைந்து, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களான Mines Advisory Group (MAG) மற்றும் The HALO Trust ஆகியவற்றுடன், உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களான Delvon Assistance for Social Harmony மற்றும் Skavita Humanitarian Assistance and Relief Project ஆகியனவும் மிதிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

மிதிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் தேசிய மிதிவெடி அகற்றும் நிலையத்திற்கும் இடையில் வருடாந்தம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில், 2026 ஜனவரி 01 முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த நான்கு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.