Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

அடுத்த 24 மணிநேரத்துக்கான வானிலை முன்னறிவிப்பு; மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

02 Sep 2026, 10:04 AM
பார்வைகள்: 116
அடுத்த 24 மணிநேரத்துக்கான வானிலை முன்னறிவிப்பு; மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

சிலாபத்தில் இருந்து கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையில் இருந்து மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, காங்கேசன்துறையில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும், காங்கேசன்துறையில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2 முதல் 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த கடற்பரப்புகளில் பயணிக்கும் மீனவர்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.