Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

வத்தளையில் இளம் பெண் கொலை; சந்தேகநபர் சடலமாக மீட்பு

05 Sep 2026, 11:01 AM
பார்வைகள்: 144
வத்தளையில் இளம் பெண் கொலை; சந்தேகநபர் சடலமாக மீட்பு

வத்தளை, பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியில் உள்ள வீடொன்றில் 18 வயதுடைய இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய நபர் ஒருவரின் சடலம் அதுருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 03ஆம் திகதி குறித்த இளம் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண், சந்தேகநபருடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும், சந்தேகநபர் அவரை அடிக்கடி சந்தேகித்து வந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தர்க்கத்தைத் தொடர்ந்து, வீட்டில் இருந்த குறித்த பெண்ணை குளியலறைக்கு அழைத்துச் சென்று சந்தேகநபர் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் 25 வயதுடைய நபர், உடுப்புஸ்ஸல்லாவ, சென்ட் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது சடலம் நேற்று (04) அதுருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் விஷம் அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், சந்தேகநபர் 2020ஆம் ஆண்டு அவிசாவளை பகுதியில் நபர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் தற்போதும் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இரு சம்பவங்கள் தொடர்பிலும் வத்தளை மற்றும் அதுருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.