Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

வறட்சி காரணமாக யால தேசிய வனத்தின் 2 வலயங்கள் தற்காலிகமாக மூடல்

14 Sep 2026, 11:58 AM
பார்வைகள்: 139
வறட்சி காரணமாக யால தேசிய வனத்தின் 2 வலயங்கள் தற்காலிகமாக மூடல்

யால தேசிய வனத்தின் 1 மற்றும் 2ஆம் வலயங்களை இன்று (14) முதல் ஒரு மாத காலத்திற்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று முதல் எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை குறித்த இரு வலயங்களும் சுற்றுலாப் பயணிகளுக்காக மூடப்பட்டிருக்கும் என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யால பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

யால தேசிய வனம் 44 பாலூட்டி இனங்கள், 215 பறவை இனங்கள், 47 ஊர்வன இனங்கள் மற்றும் 21 மீன் இனங்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களின் முக்கிய வாழிடமாக விளங்குகிறது.

பொதுவாக ஆகஸ்ட் முதல் மார்ச் வரையான காலப்பகுதி யால தேசிய வனத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தரும் காலமாகும். எனினும், இம்முறை நிலவும் எல் நினோ (El Niño) நிலைமையால் ஏற்பட்ட அதிக வெப்பமான வானிலை, சுற்றுலாப் பருவத்தையும் வனத்தின் இயற்கைச் சூழலையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

அதிக வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக பூங்காவிலுள்ள பல நீர்நிலைகள் வற்றியுள்ளதுடன், அங்கு வாழும் விலங்குகளுக்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், மரங்கள், செடிகொடிகள் மற்றும் புல்வெளிகள் காய்ந்துள்ளதால், விலங்குகள் உணவுப் பற்றாக்குறையையும் எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், விலங்குகளின் தாகத்தைத் தீர்ப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கமைய, மாணிக்க கங்கையின் நான்கு இடங்களில் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் மோட்டார்கள் பயன்படுத்தி நீரைப் பெற்று, நிலத்தடி குழாய்கள் ஊடாக பூங்காவிலுள்ள குளங்களுக்கு நீரை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தினமும் சுமார் 2 இலட்சம் லீற்றர் நீரை வாகனங்கள் மூலம் கொண்டு சென்று, பூங்காவிலுள்ள செயற்கை மற்றும் இயற்கை நீர்நிலைகளை நிரப்பும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வறட்சியான காலநிலையில் உணவு மற்றும் நீரைத் தேடி விலங்குகள் நடமாடும்போது அவற்றுக்கு ஏற்படும் இடையூறுகளை குறைக்கும் நோக்கிலும், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் யால தேசிய வனத்தின் 1 மற்றும் 2ஆம் வலயங்களை ஒரு மாத காலத்திற்கு மூடுவதற்கு வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.