Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

தையிட்டி விகாரை வளாகத்தில் புதிய கட்டுமானப் பணிகள் தொடர்வதாக குற்றச்சாட்டு

05 Oct 2026, 11:36 AM
பார்வைகள்: 83
தையிட்டி விகாரை வளாகத்தில் புதிய கட்டுமானப் பணிகள் தொடர்வதாக குற்றச்சாட்டு

தையிட்டியில் அமைந்துள்ள விகாரை வளாகத்திற்குள் புதிய கட்டுமானப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினரும், குறித்த விகாரைக்காக காணி ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறப்படும் காணி உரிமையாளர்களில் ஒருவருமான சாருஜன் தெரிவித்துள்ளார்.

விகாரை அமைந்துள்ள பகுதியில் புதிய கட்டுமானப் பணிகள் இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து, பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து சம்பவ இடத்திற்குச் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் தம்மை விகாரை வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கவில்லை என சாருஜன் தெரிவித்துள்ளார்.

“மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்படும்” என அரசாங்கம் தொடர்ந்து தெரிவித்து வருகின்ற போதிலும், புதிய அரசாங்கம் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், இதுவரை காணிகள் விடுவிக்கப்படவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

காணி விடுவிப்பு இடம்பெறாத நிலையில், குறித்த நிலப்பரப்பிற்குள் புதிய கட்டுமானப் பணிகள் தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவித்த சாருஜன், இவ்வாறான கட்டுமானப் பணிகளை அரசாங்கம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.