Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

இனவாதத்தை எதிர்கொள்ளும் மலையகத் தியாகம் : அமா எதிரிசிங்கவின் பதிவுக்கு கடும் எதிர்ப்பு

07 Oct 2026, 11:31 AM
பார்வைகள்: 148
இனவாதத்தை எதிர்கொள்ளும் மலையகத் தியாகம் :  அமா எதிரிசிங்கவின் பதிவுக்கு கடும் எதிர்ப்பு

இலங்கையின் பிரபல பாடகி யோஹானியின் இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, “எமது கொடி, எமது மொழி, எமது இசை” என்ற தலைப்பில் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவொன்றில் அமா எதிரிசிங்க என்ற பெண் தெரிவித்த கருத்து, சமூக வலைத்தளங்களிலும் இலங்கைத் தமிழ் சமூகத்தினரிடையேயும் கடும் எதிர்ப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

அமா எதிரிசிங்க தனது பதிவில், “கழிவறைகளைச் சுத்தம் செய்யவும் தேயிலை பறிக்கவும் இங்கு வந்தவர்கள், தற்போது இந்த இடத்தையே தாங்கள்தான் நடத்துவது போன்று பேசுகின்றனர். அவர்கள் தங்களது கற்பனையில் ஒரு தனி நாட்டையே உருவாக்கி வைத்துள்ளனர்” எனக் குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கருத்து, மலையகத் தமிழ் மக்களை இழிவுபடுத்தும் வகையிலும் இனவாதக் கருத்தாகவும் அமைந்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

மலையகத் தமிழ் மக்கள் பல தலைமுறைகளாக இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பணியாற்றி, நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாகவும், அவர்களை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

“தேயிலை கொழுந்து பறித்த கைகளை இழிவுபடுத்துவது எளிது. ஆனால் அந்தக் கைகள் இந்த நாட்டிற்கு செய்த பங்களிப்பை மறைப்பது அவ்வளவு எளிதல்ல. எமது மக்கள் சொகுசான வாழ்க்கையைத் தேடி இங்கு வரவில்லை. கடினமான மலைப்பகுதிகளில், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தலைமுறை தலைமுறையாக உழைத்து நாட்டின் தேயிலைத் தொழிலை வளர்த்தெடுத்துள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கழிவறைகளை சுத்தம் செய்வதிலோ அல்லது தேயிலை கொழுந்து பறிப்பதிலோ எந்த அவமானமும் இல்லை என்றும், அந்தத் தொழில்களைச் செய்யும் மக்களைத் தாழ்ந்தவர்களாகக் கருதுவதிலேயே அவமானம் இருப்பதாகவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

“எங்கள் இடம் எதுவென்று யாரும் எங்களுக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை. இது எங்கள் நாடும் கூட. இங்கு பிறக்கிறோம், வாழ்கிறோம், வாக்களிக்கிறோம், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவுள்ளதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெருந்தோட்டத்துறை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பும் குறித்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மலையகத் தமிழ் மக்களை “மண்ணை வளப்படுத்திய தியாகிகள்” எனக் குறிப்பிட்ட அவர், பல தசாப்தங்களாக கடினமான சூழ்நிலைகளில் பணியாற்றி நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களித்து வரும் மக்களை இழிவுபடுத்தும் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

மலையக மக்களுக்கு வீடு என்பது வெறுமனே கட்டடம் மாத்திரமல்ல என்றும், அது அவர்களின் நீண்டகாலக் கனவு, கௌரவம், சுயமரியாதை மற்றும் காணியுரிமையுடன் தொடர்புடையது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சமூக ஊடகங்களில் குறித்த பதிவுக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு வரும் இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், இலங்கைத் தேயிலைச் சபையின் புள்ளிவிபரங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

அவர்களின் கருத்துப்படி, கடந்த 10 ஆண்டுகளில் மாத்திரம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பின் மூலம் இலங்கைக்கு பெருமளவிலான அந்நியச் செலாவணி கிடைத்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட்-19 தொற்று காலங்களிலும் தேயிலைத் தொழில்துறை முக்கிய வருமான ஆதாரமாக விளங்கியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், கடுமையான மழை, குளிர் மற்றும் பல்வேறு ஆபத்துகளுக்கு மத்தியில் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் மலையகத் தொழிலாளர்கள், நீண்டகாலமாக பல்வேறு சமூக மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்களின் பிள்ளைகள் தற்போது மருத்துவம், சட்டம், கல்வி, பொறியியல், தொழில்முனைவு மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேறி வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் இனவாத அல்லது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான கருத்துகளை வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

மலையகத் தமிழ் மக்களை இழிவுபடுத்தும் கருத்துகள் தொடர்பில் அரசாங்கமும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான எதிர்வினைகள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், அமா எதிரிசிங்கவின் பதிவைச் சுற்றிய சர்ச்சை தற்போது பரவலான விவாதமாக மாறியுள்ளது.