Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

2025/26 பொருளாதாரக் கணக்கெடுப்பு: விவசாயத் தகவல் சேகரிப்புப் பணிகள் ஆரம்பம்!

09 Oct 2026, 09:21 AM
பார்வைகள்: 126
2025/26 பொருளாதாரக் கணக்கெடுப்பு: விவசாயத் தகவல் சேகரிப்புப் பணிகள் ஆரம்பம்!

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் 2025/26 பொருளாதாரக் கணக்கெடுப்பின் கீழ், விவசாய நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, குறித்த தகவல் சேகரிப்புப் பணிகள் ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கணக்கெடுப்பின் மூலம் விவசாயப் பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு மற்றும் பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தப்படும் காணிகள் உள்ளிட்ட விவசாயத் துறை சார்ந்த பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளன.

நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில், கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டம் வரை விவசாயத் துறையின் கட்டமைப்பு தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு, செயலாக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளன. இதன்போது, ஒரு பயிர்ச்செய்கை ஆண்டிற்குரிய விவசாயத் தகவல்கள் அடிப்படையாகக் கொள்ளப்படும்.

தேசிய மற்றும் பிரதேச மட்டங்களில் விவசாயத் துறை தொடர்பான அரசாங்கக் கொள்கைகள் மற்றும் திட்டங்களைத் தயாரிப்பதற்குத் தேவையான துல்லியமான தரவுகளைப் பெற்றுக்கொள்வது இக்கணக்கெடுப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

மேலும், கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் உள்ளூராட்சி மன்ற மட்டங்களில் தரவுப் பயனாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப தகவல்களை வழங்குவதுடன், நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை அடையாளம் கண்டு, பொருளாதாரச் சுட்டிகளின் துல்லியத்தன்மையை மேம்படுத்தவும் இக்கணக்கெடுப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படும் தகவல்களின் இரகசியத்தன்மையை முழுமையாகப் பாதுகாப்பதற்கு தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கட்டுப்பட்டுள்ளது. இதன்படி, சேகரிக்கப்படும் தனிப்பட்ட தகவல்களை எந்தவொரு நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வெளியிட முடியாது என்பதுடன், கணக்கெடுப்பு அட்டவணைகளில் உள்ள தகவல்களை நீதிமன்றத்தில் சான்றாகவும் சமர்ப்பிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்புப் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்குச் சென்று, விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் அலகுகளை அடையாளம் கண்டு, விவசாயத் துறையுடன் தொடர்புடையவர்களுடன் நேர்காணல்களை நடத்துவதன் மூலம் தேவையான தகவல்களைச் சேகரிக்கவுள்ளனர்.

எனவே, இந்தக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் உரிய தகவல்களை வழங்குவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.