Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

வீட்டில் தனியாக இருந்த 22 வயது யுவதி மர்மமான முறையில் உயிரிழப்பு; பொலிஸ் விசாரணை தீவிரம்

18 Jun 2026, 04:07 PM
பார்வைகள்: 292
வீட்டில் தனியாக இருந்த 22 வயது யுவதி மர்மமான முறையில் உயிரிழப்பு; பொலிஸ் விசாரணை தீவிரம்

கண்டி மாவட்டத்தின் பன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 22 வயதுடைய இளம் யுவதி ஒருவர் தனது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்று (17) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், பன்வில பகுதியைச் சேர்ந்த யுவதியே உயிரிழந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, சம்பவம் இடம்பெற்ற வேளையில் யுவதியின் பெற்றோர் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் யுவதி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.பின்னர் இரவு வீட்டிற்கு திரும்பிய பெற்றோர், மகள் கட்டிலில் உயிரிழந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சடலம் மீட்கப்பட்டபோது, யுவதியின் வாய்ப் பகுதியில் இருந்து இரத்தம் வெளியேறியிருந்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மரணத்தின் பின்னணியில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் இருப்பதாக விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் தடயவியல் நிபுணர்களும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மரணத்திற்கான துல்லியமான காரணத்தை கண்டறிவதற்காக சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்தின் உண்மை காரணம் உறுதிப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.