Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

ஆறு மாவட்டங்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மீண்டும் பரவல்

30 Oct 2026, 01:43 PM
பார்வைகள்: 188
ஆறு மாவட்டங்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மீண்டும் பரவல்

இலங்கையின் பல பகுதிகளில் உள்ள பன்றிப் பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (African Swine Fever – ASF) மீண்டும் பரவி வருவதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், கண்டி மற்றும் புத்தளம் ஆகிய ஆறு மாவட்டங்களில் அமைந்துள்ள 48 பண்ணைகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது இந்நோயால் பாதிக்கப்பட்ட பன்றிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் பிரதீப் குமாரவடு தெரிவிக்கையில், கடந்த ஆண்டு இந்நோயைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டிருந்த போதிலும், இவ்வாண்டு மீண்டும் பல பகுதிகளில் தொற்று பதிவாகி வருவதாகக் குறிப்பிட்டார்.

குறித்த 48 பண்ணைகளில் இருந்து சுமார் 1,200 பன்றிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், சுமார் 200 பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு பண்ணையிலும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு பன்றிகளாவது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவும் நோய் அல்ல என்பதால், மனிதர்களுக்கு நேரடியான சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தாது எனவும், பாதிக்கப்பட்ட பன்றிகளின் இறைச்சி மனித நுகர்வுக்கு ஏற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பண்ணையாளர்கள் விலங்கு சுகாதார அதிகாரிகளின் தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டுமென திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, பன்றிகளை வீட்டிலேயே அறுத்து, அவற்றின் கழிவுகளை நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இடங்களில் கொட்டுவதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கழிவுகளை முறையான சுகாதார நடைமுறைகளுக்கு அமைய அகற்றுவது நோய்ப் பரவலைத் தடுப்பதில் முக்கியமானது எனவும், பண்ணையாளர்கள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும் வைத்தியர் பிரதீப் குமாரவடு தெரிவித்துள்ளார்.நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பன்றிப் பண்ணையாளர்கள் விழிப்புணர்வுடன் செயற்படுவதும், உரிய தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதும் அவசியம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.