Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு 50 சதவீதத்தால் அதிகரிப்பு!

05 Nov 2026, 10:04 AM
பார்வைகள்: 51
இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு 50 சதவீதத்தால் அதிகரிப்பு!

இலங்கையில் 2010ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆண், பெண் இருபாலாரிடையேயும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு சுமார் 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக, புகைப்பிடிக்காதவர்கள் மற்றும் பெண்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

புகைப்பிடித்தல் மாத்திரமன்றி, காற்று மாசுபாடு, பிறர் புகைப்பிடிப்பதால் ஏற்படும் புகையைச் சுவாசித்தல், வீட்டுக்குள் உருவாகும் புகை மற்றும் அஸ்பெஸ்டாஸ் போன்ற புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பொருட்களின் தாக்கம் ஆகியவையும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக அமைவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்கு புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பதுடன், தூய்மையான காற்றோட்டம் உள்ள சூழலைப் பேணுவதும் அவசியம் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், நோய் அறிகுறிகள் தொடர்பில் விழிப்புடன் இருப்பதுடன், ஆரம்ப நிலையிலேயே மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது உயிரிழப்புகளைத் தவிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நுரையீரல் புற்றுநோய்க்கான ஆபத்து புகைப்பிடிப்பவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதைப் பொதுமக்கள் உணர்ந்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.