Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

TIN இலக்கம் பெற அவசரமில்லை; பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை – யாழ் அரசாங்க அதிபர்

26 Jun 2026, 02:42 PM
பார்வைகள்: 368
TIN இலக்கம் பெற அவசரமில்லை; பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை – யாழ் அரசாங்க அதிபர்

வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் அண்மைய நாட்களாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் விளக்கம் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று (25) உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிராந்திய ஆணையாளருடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடியதையடுத்து, பொதுமக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.அதன்படி, வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெறுவதற்கு ஜூன் 30ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்ற எந்தவொரு காலக்கெடுவும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எந்தவித கட்டணத்தையும் அறவிடுவதில்லை என்றும், இதற்காக பணம் செலுத்துவதோ அல்லது பணம் பெறுவதோ சட்டரீதியாக தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள் தங்களது தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து TIN சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும். பதிவு செய்யாதவர்கள், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளம் மூலம் அல்லது நேரடியாக அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து TIN இலக்கத்திற்காக விண்ணப்பிக்கலாம். தற்போது புதிதாக பதிவு செய்பவர்களுக்கான TIN சான்றிதழ்கள் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படவுள்ளன.

மேலதிக தகவல்களுக்கு 021 221 7333 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, TIN இலக்கம் தொடர்பாக தேவையற்ற அச்சம் அல்லது பதற்றம் அடையாமல், உரிய நடைமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.