Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

இலங்கைக்கு வந்தார் பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர்; பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முக்கிய பேச்சுவார்த்தை

02 Jul 2026, 02:20 PM
பார்வைகள்: 159
இலங்கைக்கு வந்தார் பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர்; பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முக்கிய பேச்சுவார்த்தை

ஆறாவது இலங்கை–பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் முஹம்மது அலி உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ளார்.ஜூலை 1 ஆம் தேதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவரையும், அவருடன் வந்த உயர்மட்ட தூதுக்குழுவினரையும் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஹர்ஷ விதானாரச்சி தலைமையில் அதிகாரிகள் வரவேற்றனர். இந்த வரவேற்பில் இலங்கை விமானப்படை, கடற்படை மூத்த அதிகாரிகள் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

ஆறாவது இலங்கை–பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடல் ஜூலை 3 ஆம் தேதி ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள கடற்படைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.இந்த உயர்மட்ட இருதரப்பு சந்திப்பில், இரு நாடுகளுக்கிடையிலான தற்போதைய பாதுகாப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்படுவதுடன், பிராந்திய பாதுகாப்பு, இராணுவப் பயிற்சிகள், பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு மற்றும் நீண்டகால பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இதனுடன், தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொன்தா ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.