Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
பொருளாதாரம்

உலக வங்கியின் அங்கீகாரம்: மீண்டும் மேல்-நடுத்தர வருமான நாடாக இலங்கை

02 Jul 2026, 02:27 PM
பார்வைகள்: 2,161
உலக வங்கியின் அங்கீகாரம்: மீண்டும் மேல்-நடுத்தர வருமான நாடாக இலங்கை

உலக வங்கியின் புதிய வருமான வகைப்பாட்டின்படி, 2026 ஜூலை 1 முதல் இலங்கை மீண்டும் மேல்-நடுத்தர வருமான நாடு (Upper Middle-Income Country) என்ற பிரிவில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வகைப்பாடு, 2025 ஆம் ஆண்டுக்கான தனிநபர் மொத்த தேசிய வருமானம் (GNI per capita) அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கு முன்பு, 2019 ஆம் ஆண்டிலும் இலங்கை மேல்-நடுத்தர வருமான நாடாக வகைப்படுத்தப்பட்டிருந்தது. எனினும், பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அந்நியச் செலாவணி பற்றாக்குறை மற்றும் தேசிய வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, நாடு கீழ்-நடுத்தர வருமானப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

தற்போது பொருளாதார நிலைமையில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் தேசிய வருமானத்தில் காணப்பட்ட வளர்ச்சி காரணமாக, இலங்கை மீண்டும் மேல்-நடுத்தர வருமான நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.உலக வங்கியின் இந்த வகைப்பாடு, இலங்கையின் பொருளாதார மீட்சியை வெளிப்படுத்தும் முக்கிய சர்வதேச அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இந்த மாற்றம் நாட்டின் அனைத்து மக்களினதும் வாழ்க்கைத் தரம் உடனடியாக உயர்ந்துவிட்டது என்பதைக் குறிக்காது.

உலக வங்கி, நாடுகளின் வருமானப் பிரிவை தனிநபர் மொத்த தேசிய வருமானம் (GNI per capita) என்ற அளவுகோலின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கிறது. வருமானப் பகிர்வு, வறுமை நிலை, வாழ்க்கைச் செலவு மற்றும் சமூக சமத்துவம் போன்ற காரணிகள் இந்த வகைப்பாட்டில் நேரடியாகக் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.