Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அறிவிக்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

06 Jul 2026, 10:58 AM
பார்வைகள்: 117
டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அறிவிக்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை பொதுமக்கள் எளிதில் அறிவிக்கக்கூடிய வகையில் புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தங்களது பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் காணும் பொதுமக்கள், டெங்கு நிவாரண மையத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 011 796 6366-க்கு அழைத்து தகவல் வழங்குமாறு 'க்ளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தின் மேலதிக செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் 'க்ளீன் ஸ்ரீலங்கா' செயலகம், சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, முப்படைகள், பொலிஸார் மற்றும் ஊடக அமைச்சு ஆகியவை இணைந்து முன்னெடுக்கும் வேலைத்திட்டம் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் இன்று (05) ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் நடைபெற்றது.இதன்போது, தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் தேசிய சுகாதார அவசர செயல்பாட்டு ஊடக மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அசங்க வேதமுல்ல, டெங்கு ஒழிப்பு பிரிவின் தற்காலிக பணிப்பாளர், 'க்ளீன் ஸ்ரீலங்கா' அலுவலக அதிகாரிகள், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம், முப்படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதேவேளை, மேல் மாகாணத்தில் டெங்கு பரவல் அதிகமாகக் காணப்படும் 23 வலயங்களை இலக்காகக் கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று (05) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் மகரகம, கடுவெல, ஹோமாகம, கொத்தட்டுவ, பத்தரமுல்ல, பிலியந்தலை மற்றும் கொழும்பு மாநகர சபை பகுதிகள் அதிக அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.அதேபோல், கம்பஹா மாவட்டத்தின் பியகம, களனி, சீதுவை, ஜா-எல, மகர, வத்தளை, நீர்கொழும்பு மற்றும் மினுவாங்கொடை பகுதிகளிலும், களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை, பண்டாரகம, ஹொரணை, இங்குரிய மற்றும் களுத்துறை பகுதிகளிலும் இந்த விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.டெங்கு பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பும் விழிப்புணர்வும் மிக முக்கியமானவை என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.