Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

போலி கடவுச்சீட்டு விவகாரம்: குடிவரவு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் கைது

07 Jul 2026, 12:10 PM
பார்வைகள்: 114
போலி கடவுச்சீட்டு விவகாரம்: குடிவரவு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் கைது

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றை தயாரிக்க உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்பட்டுள்ள போலி கடவுச்சீட்டு தயாரிப்பு தொடர்பான வழக்கின் போது, நீதவான் காவல்துறை மா அதிபருக்கு வழங்கிய உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த மோசடி தொடர்பான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விசாரணைகளின் படி, சென்னையிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி, மற்றொரு நபரின் கைரேகை உள்ளிட்ட உயிரியல் தகவல்களை இணைத்து கடவுச்சீட்டு விண்ணப்பம் தயாரிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.அந்த விண்ணப்பம் முறையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், அதனை அடிப்படையாகக் கொண்டு போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதற்கு குறித்த பிரதி கட்டுப்பாட்டாளர் உடந்தையாக செயல்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தில் வைத்து நேற்று (06) குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மாத்தறையைச் சேர்ந்த 51 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.