கன மழைகாரணமாக முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, கைவேலி சுண்ணாம்புச்சூளை வீதி நீரில் மூழ்கியுள்ளதால் குறித்த வீதியை பயன்படுத்தும் மக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதிக்குச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
அந்தவகையில் சுமார் 1.5 கிலோமீற்றர் தூரமான குறித்த சுண்ணாம்புச்சூளை வீதியானது நீண்டகாலமாக சீரின்றிக் காணப்படுவதாக அப்பகுதி மக்களால் நாடாளுன்ற உறுப்பினருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
இதனால் பாடசாலை மாணவர்கள், அவசர மருத்துவ சேவையைப் பெறுவதற்காக செல்பவர்கள் என சகல தரப்பினரும் நீண்ட காலமாக பலத்த இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழல் காணப்படுதவதாகவும் அப்பகுதி மக்களால் சுட்டிக்காட்டப்பட்டது
அத்தோடு தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக குறித்த சுண்ணாம்புச்சூளை வீதியானது முற்றாக பயன்படுத்த முடியாதவாறு நீரில் முழ்கிக் காணப்படுகின்றது.
எனவே தாம் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு குறித்த சுண்ணாம்புச்சூளை வீதியைச் சீரமைத்துத் தருமாறு மக்களால் கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வீதிச் சீரமைப்புத் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.